உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உடுப்பி பருத்தி சேலைக்கு உயிர் கொடுக்கும் தன்னார்வ அமைப்புகள்

உடுப்பி பருத்தி சேலைக்கு உயிர் கொடுக்கும் தன்னார்வ அமைப்புகள்

இந்திய பெண்களுக்கு தங்க நகைகளை, எந்த அளவுக்கு பிடிக்குமோ, அதே அளவுக்கு சேலைகளையும் விரும்புவர். பிறந்த நாள், திருமண நாள், பண்டிகைகள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் சேலையை விரும்புவர். நமது நாட்டில் காஞ்சிபுரம் பட்டு, மைசூரு பட்டு, பனாரஸ், தர்மாவரம் பட்டு, இலகல் பருத்தி சேலைகள் என, பல விதமான சேலைகள் உள்ளன. இந்த பட்டியலில், கைத்தறிகளில் நெய்யப்பட்ட பருத்தி சேலைகளும் இடம் பெற்றுள்ளன. மாடர்ன் சேலைகளுக்கு நடுவில், உடுப்பி பருத்தி சேலைகள் தன் தனித்துவத்தை தக்க வைத்துள்ளன. பருத்தி சேலை, பெண்களுக்கு தனி அழகையும், கம்பீரத்தையும் அளிக்கும். இந்த காரணத்தால் நம் நாட்டு பெண்கள் மட்டுமின்றி, வெளி நாட்டு பெண்களும் கூட பருத்தி சேலையை விரும்புகின்றனர். பாரம்பரியம் உடுப்பி பருத்தி சேலைகள் பிரபலமானவை. கைத்தறி சேலைகள், கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்டங்களில் நெசவாளர் சமுதாயத்தினரால் நெய்யப்படும் சேலைகளாகும். இது அவர்களின் குலத்தொழிலாகும். குறிப்பாக ஷெட்டிகார் என்ற பிரிவினர், பாரம்பரியமாக பருத்தி சேலை நெய்கின்றனர். மகாத்மா காந்தியின், ஒத்துழையாமை போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட தட்சிணகன்னடா, உடுப்பி மாவட்டங்களின் நெசவாளர்கள், தங்களுக்கென நெசவாளர் சங்கங்களை அமைத்து கொண்டு, அதில் உறுப்பினர்களாக பணியாற்றினர். 1844ல் பாஷெல் மிஷன் என்பவர், கைத்தறி நெசவு தொழிலை துவக்கினார். எளிமையான வடிவங்களில் சேலைகள் நெய்யப்பட்டன. ஜெர்மனில் இருந்து வந்த தொழில்நுட்ப நிபுணர் முல்லர் என்பவர், ப்ளைவீல் பொருத்தினார். ஆரம்பத்தில் உடுப்பி பருத்தி சேலைகளுக்கு, டிமாண்ட் இருந்தது; நாளடைவில் குறைந்தது. நெசவாளர்களும் வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்டனர். அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் கடுமையான முயற்சியால், உடுப்பி சேலைகளுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. தற்போது உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில், பருத்தி சேலைகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டது. இப்போதும் கூட, தன்னார்வ தொண்டு அமைப்புகள் செயல்படுகின்றன. பயிற்சி இளைஞர்கள், பெண்களுக்கு கைத்தறி உற்பத்திகளை மேம்படுத்த, பயிற்சி அளிக்கின்றன. உடுப்பி மாவட்ட ஆரம்ப நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், பத்மசாலி நெசவாளர் அறக்கட்டளை, தேசிய ஊரக வாழ்வாதார அமைப்பின் ஒருங்கிணைப்புடன், பயிற்சி அளிக்கிறது. கடந்தாண்டு 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி, பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் சுய தொழில் துவக்கவும், தன்னார்வ அமைப்புகள் உதவுகின்றன. தன்னார்வ அமைப்பின் தலைவர் ரத்னாகர் இந்திராளி கூறியதாவது: நெசவு தொழிலில் அனுபவமே இல்லாத குடும்பங்களை சேர்ந்த பலரும், ஆர்வமாக பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி பெறுவோருக்கு. எங்கள் தொண்டு அமைப்பின் சார்பில் மாதம் 10,000 ரூபாயும், பஸ் கட்டண செலவுக்காக 2,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. கட்டம், கட்டமாக பயிற்சி அளிக்கிறோம். உடுப்பி மாவட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு முன், 1,500 கைத்தறி நெசவாளர்கள் இருந்தனர். வருவாய் குறைவாக இருந்ததால், இவர்களின் எண்ணிக்கை, மேலும் குறையுமோ என, நினைத்து பயந்தோம். எனவே பாரம்பரியமான உடுப்பி சேலைகள் நெய்வது குறித்து, பயிற்சி அளிக்க முடிவு செய்தோம். நோக்கம் நெசவாளர்களின் வருவாயை அதிகரிப்பது, எங்களின் நோக்கமாகும். சிறப்பாக பணியாற்றிய நெசவாளர்களுக்கு, எங்கள் அமைத்து விருது வழங்கி கவுரவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, நெசவு பயிற்சி பெற்ற ஜெயலட்சுமி கூறுகையில், ''கைத்தறிகளை எப்படி கையாள வேண்டும் என்பது, எனக்கு தெரியவில்லை. ஆனால் பயிற்சிக்கு பின், தெரிந்து கொண்டேன். இது என் வாழ்வாதாரத்துக்கு உதவும் என, நம்புகிறேன்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை