சித்தராமையா தலைமையில் அடுத்த தேர்தலை சந்திப்போம்: சுரேஷ் அதிரடி
பெங்களூரு: “முதல்வர் சித்தராமையா தலைமையில், அடுத்த சட்டசபை தேர்தலை சந்திப்போம்,” என, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: என் அண்ணன் சிவகுமாரை முதல்வராக பார்க்க ஆசைப்படுவதாக முன்பு கூறி இருந்தேன். இப்போதும் அதே கருத்தை மீண்டும் சொல்கிறேன். கர்நாடக காங்கிரஸ் தலைவர், துணை முதல்வராக உள்ள அவர், கட்சி பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் பணியாற்றுகிறார். அவரது தலையில் முதல்வராக வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தால், நிச்சயம் முதல்வர் ஆவார். இல்லாவிட்டால் அது நடக்காது. எதுவும் நம் கையில் இல்லை. அரசியலில் 100 வயது உடையவர்கள் கூட இருக்கின்றனர். முதல்வர் சித்தராமையாவுக்கு 77 வயது தான் ஆகிறது. அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து முடிவு எடுப்பேன் என்று அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. அவர் எங்கள் தலைவர். வரும் 2028 சட்டசபை தேர்தலை, சித்தராமையா தலைமையில் சந்திப்போம். தலைவருக்கான அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது. புதிய திட்டங்களை கொண்டு வருகிறார். அவரது தலைமை கட்சிக்கு நிச்சயம் பலன் அளிக்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு பின், முதல்வர் பதவியில் மாற்றம் நடக்குமா என்பது பற்றி, என்னிடம் அதிக தகவல் இல்லை. ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருக்க 137 எம்.எல்.ஏ.,க்களை, மக்கள் தேர்வு செய்து உள்ளனர். கட்சி மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை திருப்திபடுத்துவது சாத்தியம் இல்லை. எந்த அரசு இருந்தாலும் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் இடையில் மாற்று கருத்து இருக்கும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் கையில் குச்சியை ஏந்தியபடி, ஊர்வலம் செல்கின்றனர். மற்ற சமூகத்தினரும் இப்படி சென்றால் என்ன நடக்கும் என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஊர்வலம் செல்லும்போது முன்பு ஷார்ட்ஸ் அணிந்திருந்தனர். இப்போது பேன்ட் அணிந்திருக்கின்றனர். அவர்களும் மாற்றம் செய்துள்ளனர். அவர்களுக்கு புத்திமதி சொல்லும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.