உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாய்கள் இனப்பெருக்கத்தை தடுக்க தங்கவயலில் ஒதுக்கப்பட்ட ரூ.15 லட்சம் என்னாச்சு?

நாய்கள் இனப்பெருக்கத்தை தடுக்க தங்கவயலில் ஒதுக்கப்பட்ட ரூ.15 லட்சம் என்னாச்சு?

தங்கவயலில் 35 வார்டுகளிலும் 1,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் நடமாட்டம் உள்ளன. இதனால் தெருவில் நடமாட முடியாமல் முதியோர், சிறுவர்கள், பெண்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கவயலில் இதுவரை இல்லாத அளவுக்கு தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தங்கவயலில் முன்பெல்லாம் தெருநாய்களை பிடிக்க வாகனங்கள் வரும்; வலை வீசி பிடித்துச் செல்வர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டுப் போய் விடுவர். சில சந்தர்ப்பங்களில் அவற்றை கொன்று புதைப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு புளூகிராஸ் சொசைட்டி, விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்கவயல் நகராட்சி முடிவின்படி, நாய்கள் இன பெருக்கத்தை தடுக்க, 2023ல் நகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்காக 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகையை முழுமையாக பயன்படுத்தியதாக தெரியவில்லை. தெருநாய்கள் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. தெருநாய்கள் எவ்வளவு உள்ளன என்ற கணக்கெடுப்பு நடந்தபாடில்லை. தெருநாய்கள் இனப்பெருக்கத்தை தடுக்க என்ன செய்தனர் என்ற விபரமும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1,000 தெருநாய்கள் இருந்திருக்கலாம் என்பது பொது கணக்கு. இதில் வயது முதிர்வு, உடல் நலம் பாதிப்பு, இயற்கைக்கு மாறான விபத்து இறப்பு மூலம் நாய்கள் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. தெருநாய் கடிப்போருக்கு 'ரேபிஸ்' ஊசி போடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனையிலும் கூட ஊசி போட்டுக் கொள்கின்றனர். தங்கவயலில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 6 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 370 பேர், சிறுமியர் 190 பேர் உட்பட 2,701 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாக மருத்துவத்துறை அதிகாரி தெரிவித்தார். தடுப்பூசி தட்டுப்பாடில்லை தங்கவயலில் ஒரே மாதத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளன. அரசு மருத்துவமனையில் 'ரேபிஸ்' தடுப்பூசி போட்டுக் கொள்வோரை பார்த்திருக்கிறேன். அம்பேத்கர் நகர், எம்.எல்.பிளாக், என்.டி.பிளாக் பகுதியை சேர்ந்த 200 பேருக்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்துள்ளன. நல்லவேளையாக தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை. வெங்கடேஷ், அம்பேத்கர் நகர், ராபர்ட்சன்பேட்டை. தனியார் கிளினிக் தெரு நாய்கள் கடித்த 50 பேரை, அரசு மருத்துவமனைக்கு எனது ஆட்டோவில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளேன். சிலர் அரசு மருத்துவமனையில் வரிசையில் நிற்பதற்கு தயங்கி, தனியார் கிளினிக்குகளில் 400 ரூபாய் செலுத்தி ஊசி போட்டு உள்ளனர். -சுந்தர், ஆட்டோ டிரைவர், மாரிகுப்பம் நடைப்பயிற்சியாளர் பாதிப்பு தினமும் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இதில் முதியோர் நான்கைந்து பேர் சேர்ந்து தான் நடைப்பயிற்சி செல்கின்றனர். தெரு நாய்களால் பெரிய தொல்லையாக இருக்கிறது. கையில் தடியுடன் தான், நடைப்பயிற்சி செல்கின்றனர். -சரவணன், ராபர்ட்சன்பேட்டை அதிகாரியுடன் ஆலோசனை தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதை முழுமையாக செலவிடவில்லை. தற்போது தெருநாய்கள் அதிகரித்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்த ஆணையருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். -வி.முனிசாமி, நிலைக்குழு தலைவர், தங்கவயல் நகராட்சி மாதந்தோறும் 500 பேர் அரசு மருத்துவமனையில் தெருநாய் கடித்து சிகிச்சை பெற மாதந்தோறும் 500க்கு மேற்பட்டோர் வருகின்றனர். இது தொடர்பான சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் இலவச ஊசி போடப்படுகிறது. ரேபிஸ் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்கிறோம். அரசிடம் ஸ்டாக் இல்லாமல் போனால், மருத்துவமனைக்கென உள்ள நிதியில் வாங்கிக் கொள்ளவும் அரசு அனுமதித்துள்ளது. தெருநாய்கள் இன பெருக்கத்தை தடுக்க நகராட்சி தான் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர் சுரேஷ் குமார், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை தங்கவயலில் தெருநாய்கள் தொல்லை இருப்பது நிஜம். இது தொடர்பாக நகராட்சி கூட்டத்தில் விவாதம் நடந்தபோது, கருத்தடைக்கு பெண் நாய்களுக்கு 1,200 ரூபாய், ஆண் நாய்களுக்கு 900 ரூபாய் செலவாகிறது என்ற விபரம் தெரிவித்தேன். இதற்காக டெண்டர் கோரப்பட்டது. 15 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு வார்டில் 25 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐந்து சதவீதம் கூட கட்டுப்படுத்தப்படவில்லை. தெரு நாய்களை பிடிக்க சென்றால் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை. எங்களின் வளர்ப்பு நாய் என கூறி தடுக்கின்றனர். கருணாகரன், காங்., கவுன்சிலர், சொர்ணா நகர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை