அதற்குள் மேட்சை முடித்துவிட்டால் எப்படி?
பெங்களூரு : ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க, சபாநாயகர் காதர் மறுத்துவிட்டார். ஐ.பி.எல்., கோப்பையை ஆர்.சி.பி., அணி வென்றதை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவுக்கு வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. இதுதொடர்பாக, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் அசோக்: ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதிக்க, சபாநாயகரின் அலுவலகத்திற்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளேன். அமைச்சர் பரமேஸ்வர்: இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இப்போது விவாதிக்க முடியாது என்ற விதிமுறை உள்ளது. அசோக்: அப்படி ஒன்றும் குறிப்பிடவில்லை. நாம் விவாதிக்கும் விஷயங்கள், நீதிமன்றத்தில் எதிரொலிக்கக் கூடாது என்றும் அதே விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை, சந்தோசமாக நான் குறிப்பிடவில்லை. நானும் ஒரு கிரிக்கெட் ரசிகர் தான். ப ரமேஸ்வர் : விதிகளில் உள்ளதை சொல்லுவது என் கடமை. சபாநாயகர் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும். சபாநாயகர் காதர்: ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அவகாசம் இல்லை. விதி எண்: 69ன் கீழ் விவாதிக்க வாய்ப்பு தருகிறேன். அசோக்: ஹஜ் யாத்திரை மேற்கொண்ட சபாநாயகர், இவ்வளவு சீக்கிரமாக வரம் கொடுத்துவிட்டால் எப்படி? சபாநாயகர்: வரம் கொடுக்கவில்லை என்றால், கொடுக்கவில்லையே என்கிறீர்கள்; கொடுத்தால், ஏன் கொடுத்தீர்கள் என்கிறீர்கள். அசோக்: ஒரு 5 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பு தருங்கள். அதற்குள், உள்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். சபாநாயகர்: விதி எண்: 69ன் கீழ் பேசுங்கள். சுனில்குமார் - பா.ஜ.,: அதற்குள் மேட்சை முடித்துவிட்டால் எப்படி? அசோக்: நாளை பே சுகிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.