கர்நாடகாவில் அடுத்து யார் ஆட்சி: குழப்புகிறார் அமைச்சர் பாலகிருஷ்ணா
பெங்களூரு: ‘‘மாநிலத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர். தேவகவுடாவோ அல்லது ரேவண்ணாவோ அல்ல,’’ என, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். ‘கர்நாடகாவில் 2028ல், குமாரசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி அமையும்’ என, மாண்டியாவில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணா நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அமைச்சர் பாலகிருஷ்ணா அளித்த பேட்டி: கர்நாடகாவில் அடுத்து யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை, மாநில மக்களே தீர்மானிப்பர். தேவகவுடாவோ, ரேவண்ணாவோ அல்ல. கர்நாடகாவில் அடுத்த முதல்வராக வருவதற்கு, சிவகுமாருக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. அதை மேலிடமே முடிவு செய்யும். குமாரசாமி ஒரு மத்திய அமைச்சர். தொழிற்சாலைகளுக்கு மாநில அரசு நிலம் தரவில்லை என்று கூறியிருக்கிறார். அவர் எங்கு வேண்டுமானாலும் நிலம் கேட்கட்டும்; நாங்கள் தருவோம். குமாரசாமியை இளைஞர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவது அவரின் பொறுப்பு. நாளையே நிலம் கேட்டு எங்களுக்கு கடிதம் தரட்டும்; மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் நிலம் தர தயாராக இருக்கிறோம். அவர்கள் தொழிற்சாலையை அமைக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.