ஆர்.எஸ்.எஸ்.,சை கட்டுப்படுத்த காங்., முயற்சி பா.ஜ., தலைவர்கள் மவுனமாக இருப்பது ஏன்?
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்.,க்கு கடிவாளம் போட முற்படும், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுக்க பா.ஜ., தயாராகிறது. தற்போதைக்கு மவுனமாக இருக்கும்படி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது, பொது இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கும்படி கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். இதன் அடிப்படையில், பள்ளிகள், மைதானங்கள், விளையாட்டு அரங்கங்கள், சாலைகள் உட்பட, பொது இடங்களில் சங்கங்கள், அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.,சை குறி வைத்து, அரசு செயல்படுவதாக பா.ஜ.,வினர் எரிச்சல் அடைந்துள்ளனர். அரசை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், கட்சி அலுவலகத்தில் இரண்டு நாட்களாக தீவிர ஆலோசனை நடக்கிறது. ஆனால் போராட்டம் நடத்தும்படி, இதுவரை ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களிடம் இருந்து, உத்தரவு வரவில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு கொண்டாட்டத்தில் உள்ளது. பல சவால்களை கடந்து, அந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள சவாலையும், திறமையுடன் எதிர்க்கொள்ளலாம் என, தலைவர்கள் ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது. இதன்படி பா.ஜ., தலைவர்கள், மவுனமாக உள்ளனர். மாநில தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி: அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு, அதிகார போதை தலைக்கு ஏறியுள்ளது. இந்த மண்ணில் தேசபக்தர்களை சீண்டி, பிழைத்தவர்கள் இல்லை என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். கலபுரகியின், சித்தாபுராவில் பாளையக்கார அரசியல் அட்டகாசம் செய்கிறது. நுாற்றாண்டு விழா கொண்டாட, ஆர்.எஸ்.எஸ்.,சும், ஹிந்து அமைப்புகளும் ஏற்பாடு செய்திருந்த அணிவகுப்பு மீது, அமைச்சர் பிரியங்க் கண் வைத்துள்ளார். இது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.