ஜனநாயக அமைப்பை குற்றஞ்சாட்டுவது ஏன்? பா.ஜ., - எம்.பி., கேள்வி
''தேர்தல் கமிஷன் மீது ஓட்டுத் திருட்டு குற்றஞ்சாட்டி, நாட்டின் ஜனநாயக அமைப்பை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்து உள்ளனர்,'' என, பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் கண்டித்துள்ளார். புதுடில்லியில் அவர் கூறியதாவது: தேர்தல் கமிஷன் மீது ஓட்டுத் திருட்டு குற்றஞ்சாட்டி, நாட்டின் ஜனநாயக அமைப்பை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்து உள்ளனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நீதித்துறை, தேர்தல் ஆணையத்தின் மீது அவநம்பிக்கை உள்ளது போன்று நடந்து கொள்கின்றனர். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தேர்தல் கமிஷன் சரி என்றும்; தோல்வி அடைந்தால் தவறு என்றும் வாதிடுகின்றனர். தேர்தல் கமிஷன், கட்சிக்கோ அல்லது தனி நபருக்காகவோ வேலை செய்யாது. நாட்டை 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, தேர்தல் கமிஷனை தவறாக பயன்படுத்தினரா? 140 கோடி மக்களும் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, பட்டியல் சமுதாயத்தினருக்கு 15 முதல் 17 சதவீதமாகவும்; பழங்குடியினருக்கு 3 முதல் 7 சதவீதமாவும் இடஒதுக்கீட்டை உயர்த்தினார். இது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. கர்நாடகாவில் உள் இடஒதுக்கீட்டை ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சமுதாய சங்கங்கள் கோரியும், மாநில அரசு செயல்படுத்தவில்லை. உடனடியாக இடஒதுக்கீட்டை அறிவிக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சொந்த காலில் நிற்க பாடுபடுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக, இலவசங்களை கொடுத்து, ஓட்டு வங்கிக்காக மட்டுமே மக்களை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -