ராஜண்ணாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியது ஏன்? : சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி
கர்நாடக காங்கிரஸ் அரசில், கூட்டுறவு துறை அமைச்சராக, நேற்று முன்தினம் காலை வரை பதவி வகித்தவர் ராஜண்ணா. நேற்று முன்தினம் மதியம் திடீரென அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது, காங்கிரஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ள ஓட்டு தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் குற்றச்சாட்டை, விமர்சனம் செய்ததற்காக தான், ராஜண்ணா, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. பதில் இல்லை இது குறித்து, நேற்று முன்தினமே எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியும், அரசு தரப்பில் எந்த விதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று காலை கர்நாடக சட்டசபை கூடியதும், 'ராஜண்ணா ஏன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்' என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அப்போது நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் அசோக்: ராஜண்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து, முதல்வர் சித்தராமையா பதில் அளிக்க வேண்டும். நேற்று முன்தினமே கேள்வி எழுப்பியும், ஊடகத்தில் வருவதற்கு பதில் அளிக்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார். ஆனால், அன்றே முதல்வரின் சிபாரிசை கவர்னர் ஏற்றுள்ளார். சட்டசபை கூட்டம் நடக்கும் போது, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது குறித்து, சட்டசபையில் பதில் அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஒரு அமைச்சரை பதவி நீக்கிய விஷயம், ஊடகத்தின் மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. அரசுக்கு பொறுப்பு இல்லையா. எந்த காரணத்திற்காக ராஜண்ணாவை, பதவியில் இருந்து நீக்கினீர்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும். (இந்த வேளையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் கூச்சல், குழப்பம் நிலவியது) சபாநாயகர் காதர்: அந்தரங்க விஷயங்களை சட்டசபையில் விவாதிப்பது வேண்டாம். பா.ஜ., - சுரேஷ்குமார்: இது அரசு சம்பந்தப்பட்ட விஷயம். அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். பா.ஜ., - சுனில்குமார்: ஆம் ஒரு அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். அசோக்: பதவியில் இருந்து நீக்கிய நாளே, அரசு பதில் சொல்லி இருக்க வேண்டும். உண்மை பேசியதால் தான், ராஜண்ணாவை பலிகடா ஆக்கியுள்ளீர்கள். பா.ஜ., - விஜயேந்திரா: ஓட்டுகள் திருடப்பட்டுள்ளதாக, பெங்களூரு வந்து ராகுல் போராட்டம் நடத்தினார். இதனால், ராஜண்ணாவை நீக்கியது அந்தரங்க விஷயம் ஆகாது. அரசு பதில் சொல்லி தான் ஆக வேண்டும். (அப்போது, எதிர்க்கட்சியினர் அனைவரும் எழுந்து, அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று உரத்த குரலில் வலியுறுத்தினர். இதை கவனித்த சபாநாயகர், அரசு தரப்பில், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலை, பதில் சொல்லும்படி அறிவுறுத்தினார்) ஹெச்.கே.பாட்டீல்: முதலில், கேள்வி நேரம் முடியட்டும். அதன்பின், அரசு தரப்பில் பதில் அளிக்கப்படும். இதன் பின்னரே இந்த விவாதம் முடிவுக்கு வந்தது. கவர்னர் கடிதம் இதற்கிடையில், மேல்சபையிலும், கூட்டம் ஆரம்பித்த உடனே, எதிர்க்கட்சியினர் ராஜண்ணா விஷயத்தை விவாதிக்க ஆரம்பித்தனர். ராஜண்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதாக, கவர்னரின் அங்கீகார கடிதத்தை, எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி காண்பித்தார். இதற்கு, அரசின் தலைமை கொறடா சலீம் அகமது எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு, 'கேள்வி நேரம் முடிந்த பின், விவாதிக்க அனுமதி வழங்கப்படும்' என்று மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிவுறுத்தினார். இதை ஏற்க மறுத்த சலவாதி நாராயணசாமி, சி.டி.ரவி, ரவிகுமார் உட்பட பலர் முக்கியமான விஷயம் என்பதால், உடனடியாக பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்வர் இல்லை அப்போது, எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேல்சபை தலைவர் எவ்வளவு சொல்லியும், யாரும் கேட்கவில்லை. இதனால், சற்று நேரம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது. ராஜண்ணா விவகாரம் குறித்து விவாதிக்கும் போது, இரு அவைகளிலும் முதல்வர் சித்தராமையா இல்லை.