கணவர் அடித்ததில் பலியான மனைவி
பீன்யா: கணவர் அடித்ததால் கோமா நிலைக்கு சென்ற மனைவி உயிரிழந்தார். பெங்களூரு, பீன்யா அருகில் உள்ள சொக்கசந்திராவில் வசிப்பவர் சோட்டேலால் சிங், 30. இவரது மனைவி ப்ரீத்தி, 26. தம்பதி தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றினர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சோட்டேலால், சரியாக பணிக்கு செல்வது இல்லை. ப்ரீத்தி, பணிக்கு சென்று, குடும்பத்தை நிர்வகித்தார். கடந்த மாதம் 24ம் தேதி, காலையே மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சோட்டேலால், மனைவியிடம் குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டார். பணிக்கு நேரமானதால், அவசர அவசரமாக கிளம்பிய ப்ரீத்தி, தண்ணீர் கொடுக்காமல், 'நீயே எடுத்து குடி' என, கூறினார். இதனால் கோபமடைந்த சோட்டேலால் சிங், கனமான பொருளால் ப்ரீத்தியின் தலையில் அடித்தார். பலத்த காயமடைந்த ப்ரீத்தி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற அவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பீன்யா போலீசார், சோட்டேலாலை கைது செய்தனர்.