உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹிந்து இயக்க தலைவர்களை வெளியேற சொல்வதா? கொந்தளிப்பு! அரசின் நடவடிக்கைக்கு தட்சிண கன்னடாவில் எதிர்ப்பு

ஹிந்து இயக்க தலைவர்களை வெளியேற சொல்வதா? கொந்தளிப்பு! அரசின் நடவடிக்கைக்கு தட்சிண கன்னடாவில் எதிர்ப்பு

படிப்பாளிகள் மாவட்டம் என்று பெயர் பெற்ற, தட்சிண கன்னடாவில் கடந்த சில ஆண்டுகளாக வகுப்புவாத மோதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த 2022ல் சுள்ளியாவின் பிரவீன் நெட்டார் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், பிரவீன் நெட்டார் கொலையான சில நாட்களிலேயே, முகமது பாசில் என்பவர் கொல்லப்பட்டார்.இந்த கொலையில் தொடர்புடைய, பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி, கடந்த மாதம் 1ம் தேதி கொலை செய்யப்பட்டார். கடந்த 6ம் தேதி டிரைவர் அப்துல் ரகுமான் என்பவரை, பன்ட்வாலில், 15 பேர் கும்பல் கொலை செய்தது.இருதரப்பிலும் மாறி, மாறி கொலைகள் நடந்து வருவதால், தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. பழிவாங்குவது தொடர்பான கருத்துகளும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

அருண்குமார் புட்டிலா

இந்நிலையில், தட்சிண கன்னடாவில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பன்ட்வாலை சேர்ந்த புவித் ஷெட்டி என்கிற புவி, 35, ராஜேஷ், 35, பவன்குமார், 33, சரண்ராஜ், 28, பரத் குமேலு, 38, ஹுசேனார், 46, முகமது சப்வான், 26, அப்துல் லத்தீப், 40, முகமது அஷ்ரப், 44, மொய்தீன், 24. விட்டலாவின் கணேஷ், 35, சவுகத் என்கிற அப்துல் காதர், 34, சந்திராஸ், 23. பெல்தங்கடியின் மனோஜ்குமார், 37, மகேஷ் ஷெட்டி திம்மாரோடி, 53, புத்துாரின் அப்துல் ஹக்கீம், 38, அஜித்ராய், 39, அருண்குமார் புட்டிலா, 54, மனீஷ், 34, அப்துல் ரகுமான், 38, அஜீஸ், 48, கிஷோர் 34, ராகேஷ், 30, நிஷாந்த் குமார், 22. கடபாவின் முகமது நவாஸ், 32, உப்பினங்கடியின் சந்தோஷ் குமார் ராய், 35, ஜெயராம், 25, சந்தீப், 24, சம்சுதீன், 36, முகமது ஷாகிர், 35, அப்துல் அஜீஸ், 36, சுள்ளியாவின் லதேஷ், 32, மனோகர், 40, பெல்லாரேயின் பிரசாத், 35, சமீர், 38 ஆகிய 36 பேரை, தட்சிண கன்னடா மாவட்டத்தை விட்டு வெளியேற்ற, கர்நாடக அரசின் உள்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. வெளியேற்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ள ஹிந்துக்கள், பல்வேறு ஹிந்து அமைப்புகளில் உள்ளனர். இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பது; லவ் ஜிகாத்திற்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக கலந்து கொள்கின்றனர். ஹிந்து அமைப்பினரை வெளியேற்றும் உத்தரவுக்கு, ஹிந்து அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.'ஹிந்துக்கள் மீது இந்த அளவுக்கு வெறுப்பு ஏன், ஹிந்துக்கள் என்ன தவறு செய்தனர். எதற்காக இந்த வெளியேற்ற நடவடிக்கை. ஹிந்துக்களுக்காக குரல் கொடுப்பவர்களை மாவட்டத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, ஒரு சமூகத்தின் கையில் மாவட்டத்தை கொடுக்க அரசு பார்க்கிறது. இங்கிருந்து ஒரு ஹிந்துவை கூட வெளியேற்ற முடியாது. முடிந்தால் வெளியேற்றி பாருங்கள்' என்று, அரசுக்கு, பல்வேறு ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.

ஓட்டு கிடைக்காது

வெளியேற்றும் பட்டியலில் இடம்பிடித்து உள்ள காங்கிரஸ் பிரமுகரான புத்துாரின் அப்துல் ஹக்கீம், புத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக்குமார் ராயை கடுமையாக சாடி உள்ளார்.அப்துல் ஹக்கீம் வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது:என்னை மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவதில், எம்.எல்.ஏ., அசோக்குமார் ராயின் பங்கு உள்ளது. முஸ்லிம்கள் ஓட்டுகளால் வெற்றி பெற்ற அவர், எங்கள் சமூகத்திற்கு அநீதி இழைக்கிறார். கொலை செய்யப்பட்ட அப்துல் ரகுமான் வீட்டிற்கு, அசோக்குமார் ராய் ஏன் செல்லவில்லை. அப்படி சென்றால் ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது என்று அவருக்கு பயம். எங்கள் வியர்வையை சிந்தி நாங்கள் அவரை எம்.எல்.ஏ., ஆக்கினோம். அடுத்த தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆக்காமல் விட மாட்டோம். இனி அவர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற மாட்டார். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை