தாவணகெரே தெற்கில் காவி கொடி பறக்குமா? சக்கர வியூகத்தில் சிக்கி கொண்ட விஜயேந்திரா
- நமது நிருபர் - கர்நாடக அரசியலுக்கும், தாவணகெரே மாவட்டத்திற்கும், எப்போதும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. கர்நாடக மாநிலத்தின், 12வது முதல்வராக இருந்த ஜே.எச்.படேல், தாவணகெரேயின் சென்னகிரி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தற்போது தாவணகெரே அரசியலில், காங்கிரசின் மறைந்த சாமனுார் சிவசங்கரப்பா குடும்பமும், பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் குடும்பமும் கோலோச்சுகிறது. தாவணகெரே தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சாமனுார் சிவசங்கரப்பா. தற்போது வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக அவரது மகனும், கர்நாடகா தோட்டக்கலைத்துறை அமைச்சருமான மல்லிகார்ஜுன் உள்ளார். கடந்த, 2008ல் தொகுதி மறுசீரமைப்பில், தாவணகெரே தொகுதி, இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடக்கு, தெற்கு தொகுதிகளாக மாறியது. 16 தேர்தல்கள் கடந்த, 2008, 2013, 2018, 2023 தேர்தல்களில், வடக்கு தொகுதியில் சாமனுார் சிவசங்கரப்பா தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். இந்தியாவிலேயே மூத்த வயதுடைய எம்.எல்.ஏ., என்ற பெயரும், அவருக்கு இருந்தது. வயோதிகம், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த, 14ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதனால், தாவணகெரே தெற்கு தொகுதி, இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னும், பின்னும், 16 தேர்தல்கள் நடந்து உள்ளன. இதில், ஒரு தேர்தலில் கூட தாவணகெரே தெற்கில் பா.ஜ., வெற்றி பெற்றதே இல்லை. காங்கிரஸ், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே வென்றுள்ளன. அபார வெற்றி இத்தொகுதியில் அசைக்க முடியாத தலைவராக இருந்த சாமனுார் சிவசங்கரப்பா மறைவால், பா.ஜ., முதல் முறையாக தன் கணக்கை துவக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், சாமனுார் சிவசங்கரப்பாவுக்கு எதிராக, லிங்காயத் சமூக வேட்பாளர்களை பா.ஜ., களம் இறங்கியும், அவர்களால் வெற்றிக்கனியை பறிக்கவே முடியவில்லை. பா.ஜ., சார்பில், 2023 தேர்தலில் போட்டியிட்ட அஜய்குமார், வெற்றி பெற்று விடுவார் என்ற பேச்சு பரவலாக அடிபட்டது. ஆனாலும், 27,888 ஓட்டுகள் வித்தியாசத்தில், சாமனுார் சிவசங்கரப்பா அபார வெற்றி பெற்றார். தோள் மீது பொறுப்பு இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில் மீண்டும் அஜய்குமார் களம் இறங்கும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் சார்பில், சாமனுார் சிவசங்கரப்பா குடும்பத்தில் யாராவது ஒருவர் களம் இறங்குவர் என, எதிர்பார்க்கலாம். இத்தேர்தலில் பா.ஜ.,வை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, கட்சியின் மாநில தலைவரான விஜயேந்திரா தோள் மீது கண்டிப்பாக விழும். அவரால், தன் சொந்த கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. தொகுதியில் சரியாக வளர்ச்சி பணி செய்யவில்லை என்று, கடந்த தேர்தலின் போது, சாமனுார் சிவசங்கரப்பா மீது, மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனாலும், கல்வி துறையில் அவர் செய்த சாதனைகள், சமூக சேவைகள் அவருக்கு கை கொடுத்தன. நாற்காலி கெட்டி அவரது இறுதி சடங்கில் பொதுமக்கள் திரண்டு வந்து பங்கேற்றதுடன், வழிநெடுகவும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது. இதனால், சாமனுார் சிவசங்கரப்பாவை குறை கூறி, விஜயேந்திரா பிரசாரம் செய்தால், அது அவருக்கு எதிராகவே திரும்பும் வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம், முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர், விஜயேந்திராவுக்கு எதிரான அதிருப்தி அணியில் முக்கிய தலைவராக உள்ளார். இத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றால், கட்சி மேலிடத்திடம் விஜயேந்திராவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால், பா.ஜ., வேட்பாளர் தோல்வி அடைய என்னென்ன வேலை செய்ய வேண்டுமோ அதை செய்வதில், சித்தேஸ்வரும், அவரது குழுவும் மும்முரமாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது. கட்சி மேலிடத்திடம் பெயர் வாங்க வேண்டும் என்றால், இத்தொகுதியில் பா.ஜ.,வை விஜயேந்திரா வெற்றி பெற வைத்தே ஆக வேண்டும். அப்படி செய்தால், அவரது மாநில தலைவர் பதவி நாற்காலி கெட்டியாக இருக்கும். இல்லாவிட்டால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. உண்மையைச் சொல்ல போனால், விஜயேந்திரா சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளார். இந்த வியூகத்தை உடைத்து வெளியே வருவாரா, தாவணகெரே தெற்கில் காவி கொடி பறக்குமா என்பதற்கு, வரும் நாட்களில் விடை கிடைத்து விடும்.