தர்மஸ்தலாவில் நிறைய எலும்பு கூடுகள் இன்று சிக்குமா?
மங்களூரு: தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், நேற்று மேலும் இரண்டு இடங்களில் பள்ளம் தோண்டியும், எலும்புக்கூடு சிக்கவில்லை. புகார்தாரர் உறுதியாக கூறும் ஒன்பதாவது இடத்தில் இன்று பள்ளம் தோண்டப்பட உள்ளது. இங்கு நிறைய எலும்புக்கூடுகள் சிக்குமா என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் துப்புரவு ஊழியர் 'பகீர்' கிளப்பினார். இந்த புகார் பற்றி விசாரிக்கும், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களை அடையாளக் குறியிட்டு உள்ளது. கடந்த 29ம் தேதி முதல் பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் மூன்றாவது நாள் நடந்த பள்ளம் தோண்டும் பணியில், அடையாளக் குறியிடப்பட்ட ஆறாவது இடத்தில் இருந்து 12 எலும்புக்கூடுகள், ஒரு மண்டை ஓடு சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. சிக்கிய எலும்புக்கூடுகள், மண்டை ஓடு, உடுப்பி மணிப்பால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைக்குட்டை நேற்று நான்காவது நாளாக, உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்டும் பணி நடந்தது. காலை 11:30 மணிக்கு ஏழாவது இடத்தில் முதலில், பள்ளம் தோண்டப்பட்டது. ஆறு அடிக்கு மேல் தோண்டியும் எலும்புக்கூடு எதுவும் சிக்கவில்லை. ஒரு கைக்குட்டை மட்டும் சிக்கியது. அதை தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதையடுத்து மதிய உணவு இடைவேளைக்கு பின் எட்டாவது இடத்திலும் பள்ளம் தோண்டப்பட்டது. 6 அடி ஆழம், 5 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டியும் எலும்பு கூடுகளோ, சந்தேகம்படும்படியான பொருட்களோ கிடைக்கவில்லை. சரியாக மாலை 6:00 மணிக்கு பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. புகார்தாரரை அங்கிருந்து அழைத்துக் கொண்டு, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் புறப்பட்டனர் . சாலையோரம் அடையாளக்குறியிடப்பட்டதில் ஒன்பது முதல் 13 வரையிலான இடங்களில் தான், நிறைய உடல்களை புதைத்ததாக புகார்தாரரும், அவரது வக்கீல்களும், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன்பு தொடர்ந்து, உறுதியாக கூறி வருகின்றனர். இன்று ஐந்தாவது நாளாக ஒன்பதாவது இடம் தோண்டப்பட உள்ளது. ஆனால் இந்த இடத்தை தோண்டும்போது, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நிறைய சவாலை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒன்று முதல் எட்டு வரை மார்க்கிங் செய்யப்பட்ட இடங்கள், நேத்ராவதி ஆற்றின் கரையோரம் வனப்பகுதிக்குள் இருந்தது. இதனால் பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் ஒன்பது முதல் 13 வரையிலான இடங்கள், தர்மஸ்தலாவில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையோரம் அமைந்துள்ளன. சாலையில் இருந்த பார்த்தாலே, அடையாளம் காணப்பட்ட இடங்கள் தெளிவாக தெரிகின்றன. பெங்., சாலை ஒன்பதாவது இடத்தில் நிறைய எலும்பு கூடுகள் சிக்கும் என்று புகார்தாரர் கூறி இருப்பதால், இன்று நடக்கும் பள்ளம் தோண்டும் பணியை பார்க்க, பொதுமக்கள் நிறைய பேர் வருவதற்கு வர வாய்ப்பு உள்ளது. தர்மஸ்தலாவில் உள்ள கோவிலுக்கு செல்வோரும் இந்த வழியாக தான் செல்ல வேண்டும். பல கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையும் இது தான் என்பதால், எஸ்.ஐ.டி., அதிகாரிகள், போலீசாருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. புகார்தாரர் கூறியது போன்று ஒன்பது முதல் 13 வரையிலான இடங்களில், நிறைய எலும்பு கூடுகள் சிக்குமா என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. மஞ்சள் காமாலையால் இறப்பு நேத்ராவதி ஆற்றங்கரையோரம் அடையாளம் காணப்பட்ட, முதல் இடத்தை தோண்டியபோது ஒரு பெண் பெயரில் இருந்த ஏ.டி.எம்., கார்டு, ஆண் பெயரில் இருந்த பான் கார்டு சிக்கியது. இரண்டு கார்டுகளையும் வைத்து, போலீசார் விசாரித்தபோது ஏ.டி.எம்., கார்டு சித்தலட்சுமம்மா என்பவருக்கும், பான் கார்டு சித்தலட்சுமம்மா மகன் சுரேஷ் என்பவருடையது எனவும் தெரிந்தது. இவர்கள் பெங்களூரு ரூரல் நெலமங்களா தாலுகா வீரசாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் இரவு நெலமங்களா போலீசார், சித்தலட்சுமம்மா வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்த சுரேஷ், 29, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் இறந்தது தெரிய வந்துள்ளது. சித்தலட்சும்மாவின் ஏ.டி.எம்., கார்டு சுரேஷிடம் தான் இருந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தர்மஸ்தலாவுக்கு சுரேஷ் சென்றபோது ஏ.டி.எம்.,கார்டு மற்றும் பான் கார்டு காணாமல் போய் உள்ளது. பள்ளம் தோண்டும்போது தற்போது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.