உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுவாச பிரச்னை ஏற்படுத்தும் மரங்கள் விரைவில் அகற்றம்?

சுவாச பிரச்னை ஏற்படுத்தும் மரங்கள் விரைவில் அகற்றம்?

பெங்களூரு : பெங்களூரில் உள்ள மனிதர்களுக்கு சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய 25,000க்கும் மேற்பட்ட 'கோனோகார்பஸ்' மரங்கள் விரைவில் அகற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பெங்களூரு நகரில் உள்ள முக்கிய சாலைகளின் நடுவே கோனோகார்பஸ் வகை மரங்களை பெங்களூரு மாநகராட்சியின் முந்தைய நிர்வாகம் நட்டது. தற்போது, நகரில் 25,000க்கும் மேற்பட்ட கோனோகார்பஸ் மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் சி.இ.சி., எனும் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட கமிட்டி ஆய்வு செய்தது. அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதன்படி, இந்த வகை மரத்தின் மகரந்த துகள்கள் எளிதில் காற்றில் பறக்கும் தன்மையுடையவை. இதனால், மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும். இந்த வகை மரங்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன. இந்த மரம் மனிதருக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்து தன்மை உடையது. இந்த மரங்கள், அதன் அருகிலுள்ள பிற மரங்களின் வளர்ச்சியை தடுக்கும் தன்மையுடையதாக உள்ளது. பூச்சி, பறவை, விலங்குகளின் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டுள்ளது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் தன்மையுடயவை. இதனால், நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது என்பதும் தெரிய வந்தது. எனவே, இவ்வகை மரங்களை முற்றிலும் அகற்றுவது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம் அலோசித்து வருகிறது. கூடிய விரைவில் அனைத்து மரங்களையும் அகற்ற உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக பெங்களூரில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட கோனோகார்பஸ் மரங்கள் முற்றிலும் அகற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, கிரேட்டர் பெங்களூரு ஆணைய வனப்பிரிவின் துணை வன பாதுகாவலர் சுதர்ஷன் கூறியதாவது: பெங்களூரில் 5,000க்கும் மேற்பட்ட கோனோகார்பஸ் மரங்களை முந்தைய மாநகராட்சி நட்டது. மீதமுள்ள 20,000 மரங்களை தனியார் அமைப்புகளே நட்டன. இந்த வகை மரங்களை நடுவதை கடந்த ஆண்டே நிறுத்தி விட்டோம். மத்திய வன அமைச்சகத்திடமிருந்து உத்தரவு வந்தவுடன் அனைத்து மரங்களும் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை