உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.3 கோடி மோசடி செய்த பெண் கைது

ரூ.3 கோடி மோசடி செய்த பெண் கைது

ஹாசன்: வாங்கிய கடனுக்காக, சில நாட்களில் இரட்டிப்பாக திருப்பித் தருவதாக நம்ப வைத்து, பலரிடம் மூன்று கோடி ரூபாய் வரை வசூலித்து, மோசடி செய்த பெண் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. ஹாசன் நகரின் அரளிபேட் கிராமத்தில் வசிப்பவர் ஹேமாவதி, 40. இவர் இதே கிராமத்தில், 'ஜோதி டிரஸ் மேக்கர்ஸ்' என்ற பெயரில் தையல் கடை நடத்துகிறார். தன்னிடம் துணி தைக்க வரும் பெண்களிடம், நல்ல முறையில் பேசி பழகி, அவர்களின் நம்பிக்கையை பெற்றார். 'நான் ஹாசனில், 1 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியுள்ளேன். என் மகள் வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க செல்கிறார். நான் கொடசாத்ரி சிட் கம்பெனியில், 1 கோடி ரூபாய் சீட்டுப் போட்டுள்ளேன். இரண்டு மாதங்களில் இரட்டிப்பு பணம் வரும். இப்போது அவசர தேவைக்கு பணம் வேண்டும். கடனாக கொடுத்தால். சில நாட்களில் இரண்டு மடங்காக திருப்பித் தருகிறேன்' என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய பல பெண்கள், தங்களின் தங்க நகைகளை அடமானம் வைத்து, ஹேமாவதியிடம் பணம் கொடுத்தனர். கொடுத்த பணத்தை நீண்ட நாட்களாகியும் திருப்பித் தரவில்லை. பல பெண்களை ஏமாற்றி வாங்கிய பணத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், ஆடம்பர வீடு வாங்கி ஹேமாவதி சொகுசாக வாழ்ந்தார். பணத்தை திருப்பித் தரும்படி பெண்கள் மன்றாடியும் பொருட்படுத்தவில்லை. நேற்று காலை சாலையில் சென்று கொண்டிருந்த ஹேமாவதியை, பெண்கள் மடக்கிப் பிடித்து பணம் கேட்டனர். அப்போதும் ஏதேதோ காரணங்களை கூறி மழுப்பினார். பொங்கியெழுந்த பெண்கள், அவரை சூழ்ந்து, முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இவர் மீது, ஹாசன் நகர் போலீஸ் நிலையத்திலும், பென்ஷன் மொஹல்லா போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, 3 கோடி ரூபாய் வசூலித்து பெண்களை ஏமாற்றியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது ஹேமாவதி கைது செய்யப்பட்டுள்ளார். மோசடியில் ஹேமாவதியின் கணவர் விருபாக்ஷாவுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. அவரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !