உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பசிக்கொடுமை பெண் தற்கொலை

பசிக்கொடுமை பெண் தற்கொலை

உத்தரகன்னடா: பசிக்கொடுமையால் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகன்னடா மாவட்டம், எல்லாபுரா தாலுகாவின் அங்கோட் கிராமத்தில் வசித்தவர் லட்சுமி சித்தி, 48. இவர் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இவரது மகள் திருமணமாகி, தன் குடும்பத்தினருடன் வசிக்கிறார். கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்திய லட்சுமியின், உடல் நிலை சமீபத்தில் பாதிக்கப்பட்டது. இதனால், அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை. வருமானம் இல்லாமல் தவித்தார். மகள் வீட்டுக்கு செல்லவும் மனம் இல்லாமல், பட்டினியாக இருந்துள்ளார். அவரிடம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான பி.பி.எல்., ரேஷன் கார்டு இல்லை. அரசின் வாக்குறுதித் திட்டங்களின் பயனும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே இலவச உணவு தானியங்கள் பெற முடியவில்லை. இரண்டு நாட்களாக உணவின்றி பரிதவித்த லட்சுமி, பசி பொறுக்க முடியாமல், 2ம் தேதியன்று, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து, எல்லாபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. லட்சுமியின் மகள் மங்களா கூறியதாவது: என் தாய் சாப்பிட எதுவும் கிடைக்காமல், பசியால் தற்கொலை செய்து கொண்டார். அவர் நோயால் பாதிக்கப்பட்டதால், வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியவில்லை. அரசின் எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. என் கணவர் கோவாவில் தினக்கூலியாக, ஹோம் நர்சாக வேலை செய்து, பணம் அனுப்புகிறார். இதை வைத்து நானும், என் மூன்று குழந்தைகளும் பிழைக்கிறோம். என் தாய்க்கு உதவ முடியவில்லை. எங்களுடன் வந்து வசிக்கும்படி, பல முறை அழைத்தும், வர மறுத்தார். வேலை செய்து பிழைக்க, சக்தி இல்லாததாலும், தன்னை பார்த்துக்கொள்ள, யாரும் இல்லை என்ற வருத்தத்தாலும், மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ