குப்பை கொட்டி டான்ஸ் ஆடிய பெண்ணுக்கு அபராதம்
பெங்களூரு: பெங்களூரில் சாலையோரம் குப்பை வீசப்படுவதை தடுக்கும் வகையில், குப்பை வீசுவோரை கண்டறிந்து, அவர்கள் வீடுகளின் முன்பே குப்பையை கொட்டும் நடைமுறையை, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. பொது இடத்தில் குப்பை வீசுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மைகோ லே - அவுட் போலீஸ் நிலையம் பின்பக்க பகுதியில் உள்ள சாலையில், பி.ஜி.,யில் வசிக்கும் மூன்று இளம்பெண்கள், நேற்று முன்தினம் இரவு குப்பையை கவரில் எடுத்து வந்து, பொது இடத்தில் வீசிச் சென்றனர். குப்பையை போட்ட பின், குப்பை கொட்டிய இடத்தின் அருகில், ஒரு பெண் நடனமாடினார். இது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. நடனம் ஆடியவர் உட்பட 3 இளம்பெண்களிடம் இருந்து மொத்தம் 1,000 ரூபாயை அபராதமாக, நேற்று காலை ஜி.பி.ஏ., மார்ஷல்கள் வசூலித்தனர்.