வீடு புகுந்து பெண் கொலை தங்க நகைகள் கொள்ளை
பெலகாவி : அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணை கொன்று, அவர் அணிந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெலகாவி மாவட்டம், கணேஷ்புராவில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் அஜித்; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அஞ்சனா அஜிதா தொட்டிகர், 53.காலையில் பணிக்கு சென்றால், இரவு தான் வீடு திரும்புவார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, அஞ்சனா சுயநினைவின்றி தரையில் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அஜித், அக்கம் பக்கத்தினரை வரவழைத்து, மனைவியை பெலகாவி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியில் உயிரிழந்துவிட்டார். கழுத்து நெரிக்கப்பட்டதால், அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அஞ்சனா அணிந்திருந்த தாலி, இரண்டு கம்மல், இரண்டு மோதிரங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பெலகாவி கேம்ப் போலீசில் புகார் செய்யப்பட்டது.டி.சி.பி., நிரஞ்சன்ராஜே அர்ஸ் கூறுகையில், ''நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், அஞ்சனா கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.''இவ்வீட்டில் கணவன், மனைவி மட்டுமே வசித்து வந்துள்ளனர். இவர்களின் இரு மகள்களுக்கும் திருமணமாகி, புனேயில் வசித்து வருகின்றனர். சில தடயங்கள் கிடைத்துள்ளன. இதை வைத்து கொலையாளியை கண்டுபிடித்துவிடுவோம். இங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததை தெரிந்த நபரே, இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்,'' என்றார்.