வீட்டின் மாடியை தோட்டமாக மாற்றி பரவசம் செடிகளுக்கு நன்றி கூறி முத்தம் கொடுத்த பெண்
காபி செடிகள் குடகு, சிக்கமகளூரில் தான் விளையும் என்பதை மாற்றி, பெங்களூரின் சீதோஷ்ண நிலையில், வீட்டின் மாடியிலும் வளர்க்கலாம் என்பதை நிரூபித்து காட்டி உள்ளார் 67 வயது பெண். பெங்களூரை சேர்ந்தவர் இந்திரா அசோக் ஷா. தன் பாட்டி, தாயார் போன்று தோட்டத்தை பராமரிப்பதில் பிரியம் கொண்டவர். வீட்டின் அருகில் இருந்த காலி இடத்தில், செடிகளை வளர்த்து வந்தார். தினமும் காலையில் எழுந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தார். ஒரு நாள் நிலத்தின் உரிமையாளர், இந்திராவிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், செடிகளை அகற்றிவிட்டார். இதை பார்த்த அவர் மிகவும் வேதனை அடைந்தார். காய்கறிகள் அதன்பின், 1982 முதல் தனது வீட்டின் மாடியிலேயே தோட்டம் அமைக்க முடிவு செய்தார். மாடியில் வெண்டைக்காய், தக்காளி, கத்திரிக்காய், சோளம், பீன்ஸ் உட்பட பல காய்கறி செடிகளை வளர்த்து வந்தார். ஒரு கட்டத்தில், தன்னை போன்று மாடியில் தோட்டம் வைப்பவர்களின் ஆலோசனையை கேட்டு, டிராகன் புரூட், ஆரஞ்சு, சீதாப்பழம், அன்னாசிபழம், தர்பூசணி, செர்ரி உட்பட பல பழ வகைகள் வளர்க்க துவங்கினார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 20 லிட்டர் பக்கெட்டில், மா மரத்தை வளர்த்து வருகிறார். இந்த மரத்தை வைத்தபின், அதில் இருந்து செடி முளைத்தபோது ஆச்சரியப்பட்டார். பில்டர் காபி அப்போது தான் அவரது நண்பர் காபி செடி வளர்ப்பது குறித்து ஆலோசனை வழங்கி உள்ளார். அது குறித்து பல இடங்களில் விசாரித்து, காபி செடிகளை வளர்க்க துவங்கினார். இதிலும் வெற்றி பெற்றார். தற்போது காபி செடி மூலம் ஆண்டுக்கு ஒரு கிலோ வரை 'காபி பீன்ஸ்' பெறுகிறார். இதன் மூலம், வீட்டுக்கும், அவருக்கு பிடித்த 'பில்டர் காபி'யும் செய்து குடிக்கிறார். ஒவ்வொரு முறை செடிகள் பழங்கள் கொடுக்கும் போது அவற்றிற்கு நன்றி தெரிவிக்கிறார். இதன் மூலம் செடிகளுடன் அவருடைய தொடர்பை வெளிப்படுத்துகிறார். சில நேரங்களில் செடிகளுக்கு முத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதை பார்த்த சிலர் சிரித்துள்ளனர். ஆனால் அதை பற்றி அவர் கவலைப்படவில்லை. தற்போது இவரின் மாடி தோட்டத்தில் மாம்பழம், காய்கறிகள், காபி என 500க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகிறார். - நமது நிருபர் -