19 நாட்களுக்கு பின் பெண் உடல் தோண்டி எடுப்பு
முல்பாகல்: சாவில் மர்மம் இருப்பதாக அடக்கம் செய்யப்பட்ட பெண் சடலம், 19 நாட்களுக்கு பின், தோண்டி எடுக்கப்பட்டது. முல்பாகலின் ஆவனி அருகே உள்ள பொம்மசந்திரா கிராமத்தில், வெங்கடராஜு என்பவரின் மகள் லட்சுமி குமாரி, 23. ஆகஸ்ட் 9ம் தேதி வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் லட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக முல்பாகல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. அப்பெண்ணின் உடல், அதே கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இப்பெண் இறப்பு குறித்து பலரும் பலவிதமான சந்தேகங்களுடன் பேசுவதை ரோந்து சென்ற போலீசார் அறிந்தனர். இதனால் போலீசார் தாங்களாகவே வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 19 நாட்களுக்கு பிறகு உதவி மாவட்ட கலெக்டர் மைத்ரி, முல்பாகல் தாசில்தார் வி.கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.ஜி.சதீஷ் குமார் முன்னிலையில் அப்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் சில பாகங்களை தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.