உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு பஸ்களில் பெண்கள் நின்றபடி பயணிிக்க தடை!

அரசு பஸ்களில் பெண்கள் நின்றபடி பயணிிக்க தடை!

கர்நாடகாவில், காங்கிரஸ் அரசு அமைந்ததும், தங்களின் ஐந்து தேர்தல் வாக்குறுதிகளில், பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு பெண்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. பெண்கள் பலர் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு, பஸ்களில் இலவசமாக பயணித்தனர். 800 கோடிக்கும் அதிகமான பெண்கள் இலவசமாக, இதுவரை பயணம் செய்துள்ளனர். இதனால் பஸ்களில் பயணியரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை உச்ச நேரங்களில் பஸ்கள் பயணியரால் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் பஸ்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது, கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கின்றன. இதனால் இருக்கையில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில், பெண்கள் இடையே, 'குடுமிப்புடி' சண்டையும் நடந்தது. சில நேரங்களில் பஸ்களில் கண்ணாடிகள், கதவுகள் கூட உடைந்த உதாரணங்கள் உள்ளன. இது தொடர்பாக, பாகல்கோட்டையை சேர்ந்த வைகுண்டநாத் தாஸ், மாநில போக்குவரத்து துறைக்கு எழுதிய கடிதத்தில், சக்தி திட்டத்தால், பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணியர் பயணிக்கின்றனர். இதனால் குழந்தைகள், மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக, புகார் குறிப்பிட்டிருந்தார். இதை பரிசீலித்த போக்குவரத்து துறை கமிஷனர், பஸ்களில் பயணியரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ள அவர், அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: பஸ்களில் இருக்கைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணியரை ஏற்றி செல்ல வேண்டும். குறிப்பிட்ட இருக்கைக்கு மேல் பயணியரை ஏற்றி செல்லக்கூடாது. இந்த விதிமுறை மாநிலத்தில் இயங்கும் அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொருந்தும். விதிகளை மீறும் ஓட்டுநர், நடத்துனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும். இது தொடர்பாக மாநிலத்தின் அனைத்து ஆர்.டி.ஓ., கமிஷனர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து துறையின் விதிகள் அறியாமலும், அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தால், பஸ்களில் பயணியர் ஏறும்போது, ஓட்டுநர், நடத்துனர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பஸ்களில் பயணியர் யாரும் நின்றபடி பயணிக்க கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன், கூட்டம் அதிகமாக இருக்கும் போது, மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் நின்றபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளும் திருடர்கள், பிக்பாக்கெட்டுகள், செயின் திருடர்கள், மொபைல் போன் திருடர்கள், குற்ற செயலில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து துறையின் இந்த உத்தரவு, எப்படி திறம்பட செயல்படுகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை