உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  யானை தாக்கி தொழிலாளி பலி

 யானை தாக்கி தொழிலாளி பலி

குடகு: விராஜ்பேட்டில், யானை தாக்கியதில் மேற்கு வங்க தொழிலாளி பலியானார். குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின் சித்தாபூரில் ஷில்பா எஸ்டேட்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோபாலன் பவாரி, ஜாதவ் பவாரி என இரு கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சம்பவத்தன்று உணவு தேடி யானை ஒன்று வந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள், ஓடினர். ஆனாலும் விடாமல் துரத்திய யானை தாக்கியதில், கோபாலன் பவாரி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜாதவ் பவாரி, சித்தாபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக மடிகேரி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தகவல் அறிந்த வனத்துறையினர் தாக்குதல் நடத்திய யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோபமடைந்த அப்பகுதியினர், 'கடந்த எட்டு நாட்களில் மூன்று காட்டு யானைகள், பொது மக்களை தாக்கி உள்ளன. இதில், இருவர் உயிரிழந்துள்ளனர். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை' என அதிருப்தி தெரிவித்தனர். இதற்கிடையில், இச்சம்பவத்தை கண்டித்து பா.ஜ.,வினர் திடீரென குடகு வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாநில காங்கிரஸ் அரசுக்கும், வனத்துறையினருக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை