மேலும் செய்திகள்
சடங்காக நடந்து முடிந்த வார்டு சபை கூட்டங்கள்
31-Oct-2025
மைசூரு: “மைசூரில் இருந்து பலரும், என்னை தேடி பெங்களூரு வருகின்றனர். நான் இல்லை என்றால், இரவு வரை காத்திருக்கின்றனர். இவர்களில் சிலர் தனிப்பட்ட பிரச்னைக்காக வருகின்றனர். பெரும்பாலானோர், வருவாய் துறை பிரச்னைகளை தீர்க்கக் கோரி வருகின்றனர். இங்குள்ள அதிகாரிகள், மக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்திருந்தால், என்னை தேடி பெங்களூரு வருவரா?” என, அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா காய்ச்சி எடுத்தார். மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக மேம்பாட்டு திட்டத்தின் முன்னேற்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: அதிகாரிகளும், ஊழியர்களும் பொது சேவை உறுதிமொழி எடுத்து, தங்கள் பதவியில் உள்ளனர். அவர்கள், அதை கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறோம். அதிகாரிகளான நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். அதை உணர்ந்து பணியாற்றுங்கள். சிபாரிசு இடமாற்றத்துக்காக, அதிகாரிகள், ஊழியர்களும் சிபாரிசுக்காக எங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து வருவது மோசமான செயல். இது கட்சியினருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சித்தால், பொறுத்துக் கொள்ள முடியாது. கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மைசூரில் மேம்பாட்டுப் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். முந்தைய கர்நாடக மேம்பாட்டு திட்ட கூட்டத்தில் கூறியதை செய்யவில்லை. மாவட்ட மேம்பாட்டுப் பணிகளுடன், மைசூரு மக்களின் பிரச்னைகளை கேட்டு, தீர்வுகளை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். மைசூரில் இருந்து பலரும், என்னை தேடி பெங்களூரு வருகின்றனர். நான் இல்லை என்றால், இரவு வரை காத்திருக்கின்றனர். இவர்களில் சிலர் தனிப்பட்ட பிரச்னைக்காக வருகின்றனர். பெரும்பாலானோர், வருவாய் துறை பிரச்னைகளை தீர்க்கக் கோரி வருகின்றனர். இங்குள்ள அதிகாரிகள், மக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்திருந்தால், என்னை தேடி பெங்களூரு வருவரா? மருத்துவமனைகள், பள்ளிகள், விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும்படி மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தும், செய்யவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புகார்கள் வந்துள்ளன. தாலுகா அலுவலகத்துக்கு மாவட்ட கலெக்டர் திடீரென சென்றால், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் பிடிபடுவர். இதுவரை யாரும் பிடிக்கப்படவில்லை; அறிக்கையும் வரவில்லை. வேதனை கல்வியில் மைசூரு மாவட்டம் ஏழாவது இடத்தில் இருந்து 14வது இடத்துக்கு சரிந்தது வேதனை அளிக்கிறது. உங்களின் பதவிக் காலத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர் என்று நம்புகிறேன். எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., தேர்வுகளில் மாவட்டம் முன்னேற வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வரைபடத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
31-Oct-2025