மஞ்சள் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு
பெங்களூரு: மெட்ரோ ரயில் 'மஞ்சள்' வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தடைபட்டதால் பயணியர் அவதிக்கு உள்ளாகினர். பெங்களூரு, ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் 'மஞ்சள்' வழித்தடத்தில் நேற்று காலை 8:00 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் இயக்குவது பாதிக்கப்பட்டது. ரயில்கள் இயங்காததால் காலை வேளையில் பணிக்கு செல்லும் பயணியர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பலரும் ஆத்திரமடைந்து, மெட்ரோ நிர்வாகத்தை திட்டத் துவங்கினர். தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 8:47 மணிக்கு மீண்டும் ரயில்கள் வழங்கம்போல் இயக்கப்பட்டன. மஞ்சள் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கி, நான்கு மாதங்கள் முடிவடைவதற்குள் நான்கு முறை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் பயணியர் அவதி அடைவதும் வாடிக்கையாகிவிட்டது.