உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காதலிக்கு வாழ்த்து கூற சென்று சாக்கடையை துளாவிய இளைஞர்

 காதலிக்கு வாழ்த்து கூற சென்று சாக்கடையை துளாவிய இளைஞர்

மங்களூரு: தன் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த இளைஞர், சாக்கடையில் கை விட்டு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக, கார் சாவியை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. தட்சிண கன்னடா மாவட்டம், கடபா தாலுகாவின், ஈஸ்வரமங்களா கிராமத்தில் வசிக்கும், 27 வயது இளைஞர், ஒரு இளம் பெண்ணை காதலிக்கிறார். நேற்று முன் தினம் காதலிக்கு பிறந்த நாள். எனவே அவருக்கு வாழ்த்து கூறும் நோக்கில், கடபாவின், சந்தேகட்டே அருகில் காதலி பணியாற்றும் அலுவலகத்துக்கு, மதியம் 2:00 மணிக்கு வந்தார். தன் நண்பரின், 'சுசுகி ஸ்விப்ட்' காரை வாங்கி வந்திருந்தார். அலுவலகம் வெளியே நிறுத்திவிட்டு, முதல் மாடிக்கு சென்று காதலியை சந்தித்தார். அவருக்கு வாழ்த்து கூறினார். இருவரும், ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே பேசினர். அதன் பின், அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த காதலி, இளைஞரின் கையில் இருந்த கார் சாவியை, பலவந்தமாக பறித்து, அங்கிருந்த புதர் மண்டிக்கிடந்த, ஆழமான கழிவு நீர் சாக்கடையில் வீசி விட்டு, கோபமாக சென்றுவிட்டார். கண் எதிரே சாவி நீரில் மூழ்கியதை கண்டு, அதிர்ச்சியடைந்த இளைஞர் என்ன செய்வது என, தெரியாமல் பரிதவித்தார். சாக்கடையில் கையை விட்டு சாவியை தேட துவங்கினார். அவரது பரிதவிப்பை கண்ட அப்பகுதியினர், உதவிக்கு வந்தனர். சந்தேகட்டே போன்ற பரபரப்பான பகுதியில், சாக்கடைக்குள் எதையோ தேடுவதை கண்டு, நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்பகுதியினர், சாவியை தேட வசதியாக சாக்கடையில் வளர்ந்து கிடந்த செடி, கொடிகளை வெட்டினர். கழிவு நீர் என, பார்க்காமல் பலரும் தேடினர். ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக தேடியும், சாவி கிடைக்கவில்லை. இளைஞர் சோர்ந்து போனார். சாவி தேடுவதை நிறுத்திவிட்டு அனைவரும் சென்றனர். இளைஞரும், காரை, கடபா நகரில் விட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். நடந்த சம்பவத்தை சிலர், தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து வெளியிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை