ஜி.டி., மாலின் 3வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி
பெங்களூரு: பெங்களூரு ஜி.டி., மாலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தார். கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரு மாகடி சாலை சோளூர் பாளையாவில் உள்ளது ஜி.டி., வோர்ல்டு மால். தீபாவளியான நேற்று, பொது மக்கள் அதிகளவில் மாலுக்கு வந்திருந்தனர். காலை 9:40 மணியளவில் மூன்றாவது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் தரைதளத்தில் விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தோர், அவர் அருகில் செல்லாமல் இருந்தனர். துடிதுடித்து கொண்டிருந்த அந்த நபர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக, கே.பி.அக்ரஹாரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், உடலை விக்டோரியா மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எங்கிருந்து வந்தார், கொலையா, தற்கொலையா என்று போலீசார் விசாரிக்கின்றனர். இதையடுத்து பொது மக்கள் மாலுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. கடந்தாண்டு, ஹாவேரியை சேர்ந்த விவசாயி, தன் மகனுடன் மாலுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த செக்யூரிட்டி, விவசாயிக்கு அனுமதி மறுத்தார். இந்த காட்சி, சமூக வலைதளத்தில் பரவியது. இதை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், மாலுக்கு சீல் வைத்தனர். ஏழு நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.