உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாலிபரை சித்ரவதை செய்த கந்துவட்டி கும்பல்

வாலிபரை சித்ரவதை செய்த கந்துவட்டி கும்பல்

ஹாவேரி: வட்டி கட்ட தாமதமானது என்பதற்காக வாலிபரை கடத்தி சென்று, சித்ரவதை செய்த நால்வர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது. ஹாவேரி மாவட்டம், ஷிகாவி தாலுகாவின், பங்காபுராவில் வசிப்பவர் மணிகண்டா ஹளவள்ளி, 32. இவர் தன் குடும்ப தேவைக்காக, கந்து வட்டிக்காரரிடம் 70,000 ரூபாய் கடன் வாங்கினார். வாரந்தோறும் 1,500 முதல் 2,000 ரூபாய் வட்டி கட்டினார். ஆனால் சில வாரங்களாக, அவரால் வட்டி செலுத்த முடியவில்லை. வட்டி கட்டவில்லை என்ற கோபத்தால், அக்டோபர் 16ம் தேதியன்று கந்துவட்டி நபர்கள், மணிகண்டாவை கடத்தி சென்று, ரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர். அவரது கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்தனர். மரக்கட்டை மற்றும் பைப்புகளால் கண் மூடித்தனமாக தாக்கினர். சிகரெட்டால் உடலின் பல இடங்களில் சூடு வைத்தனர். அது மட்டுமின்றி வாயில் சிறுநீரை ஊற்றி கொடுமைப்படுத்தினர். இவரை கொடுமைப்படுத்துவதை கவனித்த, அடையாளம் தெரியாத நபரின் உதவியால், அக்டோபர் 20ம் தேதி மணிகண்டா, அங்கிருந்து தப்பினார். அப்பகுதியினரின் உதவியுடன், தன் குடும்பத்தினரை தொடர்பு கொண்டார். அதன்பின் அங்கு வந்த குடும்பத்தினர். பலத்த காயமடைந்திருந்த மணிகண்டாவை, ஹாவேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் ஓரளவு குணமடைந்த அவர், பங்காபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில், கந்து வட்டிக்காரர்கள் மஞ்சுநாத் கத்தி, நவீன் ஹனகல், சுனில் கத்தி, கணேஷ் ஸ்வாதி ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !