நடன நிகழ்ச்சியில் தகராறு இளைஞர் குத்தி கொலை
பாகல்கோட்: தசரா தாண்டியா நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறால் இளைஞர் கொலை செய்யப்பட்டார். பாகல்கோட் மாவட்டம், முதோல் தாலுகாவின் விநாயகா நகரில் தசராவையொட்டி, நேற்று முன் தினம் இரவு தாண்டியா நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இளைஞர்களும், இளம் பெண்களும் உற்சாகத்துடன் நடனமாடினர். அப்போது சீனிவாஸ் கதரி, 22, என்பவர் அங்கு வந்தார். மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த அவர், நடனமாடிய பெண்களை பார்த்து கேலியும், கிண்டலும் செய்தார். பூஜை செய்த இளைஞர்களுக்கும் தொல்லை கொடுத்தார். இதை பார்த்த நிதின் நிம்பால்கர், 25, சீனிவாஸ் கதரியை கண்டித்து, அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர் செல்லாமல், மீண்டும் தொந்தரவு கொடுத்தார். இதனால் அவரை கன்னத்தில் அறைந்து, நிதின் நிம்பால்கர் விரட்டினார். கோபமடைந்த சீனிவாஸ் கதரி, தன் நண்பர்கள் பிரதீப் மற்றும் சம்பத்தை அழைத்து கொண்டு, நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து, தகராறு செய்தார். நிதின் நிம்பால்கரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். சண்டையை விலக்கி விட முயற்சித்த நிதினின் சித்தப்பா சஞ்சய் நிம்பால்கரையும் கத்தியால் குத்தினார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். முதோல் போலீசார், சீனிவாஸ் கதரியை கைது செய்தனர்.