ஒரு மாநிலம், ஒரு கிராம வங்கி பின்பற்ற மத்திய அரசு திட்டம்
புதுடில்லி,:'ஒரு மாநிலம், ஒரு மண்டல கிராம வங்கி' என்ற கொள்கையை பின்பற்ற, மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.இது குறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மண்டல கிராம வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், ஒரு மாநிலத்தில் பொதுத்துறை வங்கிகளின் ஆதரவுடன் செயல்படும் மண்டல கிராம வங்கிகள் இடையே தேவையற்ற போட்டியை தவிர்க்கும் விதமாக, 'ஒரு மாநிலம், ஒரு மண்டல கிராம வங்கி' என்ற கொள்கையை அமல்படுத்த நிதியமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி, நாடு முழுதும் தற்போது உள்ள 43 மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை, 30 ஆக குறைக்கப்படும். மேலும், ஒரு மாநிலத்தில் உள்ள பல்வேறு மண்டல கிராம வங்கிகள், ஒரே மண்டல கிராம வங்கியாக இணைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2023 -- 24ம் நிதியாண்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில், மண்டல கிராம வங்கிகளின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 7,571 கோடி ரூபாயை தொட்டுள்ளது. மேலும், மொத்த வாராக்கடன் விகிதமானது, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.10 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.