வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ப முதலீடு செய்வது எப்படி?
முதலீடு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களில், பொருத்தமான நிதி சாதனங்களில் முதலீடு செய்வதும், முதலீடு விரிவாக்கமும் முக்கியமானவை. ஒரே வகையான முதலீடுகளை மட்டும் கொண்டிருக்காமல், பங்கு, கடன்சார் முதலீடு, தங்கம், ரொக்கம் என பலவகையான முதலீடுகளை நாட வேண்டும். நிதி இலக்குகள், தற்போதைய வருமானம் உள்ளிட்ட அம்சங்களோடு வாழ்க்கை நிலையும் முக்கிய அம்சமாகிறது. அந்த வகையில் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ற வகையிலான முதலீட்டு தொகுப்பினை பெற்றிருக்கும் வழிகளை பார்க்கலாம்.முதலீட்டு பலன்:
ஒவ்வொரு வகை முதலீடும் ஒரு விதமானவை. சமபங்குகள் அதிக பலன் அளிக்க வல்லவை என்றாலும் குறுகிய கால நோக்கில் ஏற்ற இறக்கம் கொண்டவை. கடன்சார் முதலீடுகள் பாதுகாப்பானவை என்றாலும், அவற்றின் பலன் அதிக வளர்ச்சி அளிக்கக் கூடியது அல்ல.ரொக்கம் முக்கியம்:
தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அளிக்கக் கூடியது என்றாலும், அதன் பலன் வரம்புகள் கொண்டது. ரொக்கம் என்பது தினசரி செலவுகள், அவசரத் தேவைகளை சமாளிக்கத் தேவையானது. ரியல் எஸ்டேட் போன்ற பிறவகை முதலீடுகள் எல்லா தரப்பினருக்கும் ஏற்றது அல்ல.
நிதி திட்டமிடல்:
சிறந்த நிதி திட்டம் என்பது, நிதி இலக்குகளை அடையும் வகையில் பொருத்தமான முதலீட்டு வகைகளை கொண்டிருக்க வேண் டும். இதில் பல்வேறு அம்சங்கள் அங்கம் வகிக்கின்றன. வருமான அளவு, தேவைகள், இலக்குகள் தவிர, வாழ்க்கை நிலையும் முக்கியமாகிறது. வாழ்க்கை நிலைக்கு ஏற்ப முதலீட்டுத் தொகுப்பு இருக்க வேண்டும்.இளம் வயது:
தொழில் வாழ்க்கையின் துவக்கத்தில் இருப்பவர்கள், சொந்த வீடு, பிள்ளைகள் கல்வி, பெற்றோர்கள், ஓய்வுக்காலம் என பலவற்றுக்குத் திட்டமிட வேண்டும். இதற்கேற்ப அதிக வளர்ச்சி தரக்கூடிய சமபங்கு முதலீடுகளை நாடலாம். இளம் வயதில் இடர் தாங்கும் தன்மை இருக்கும். ஆரம்பத்திலேயே முதலீடு செய்வதும் பலனளிக்கும்.ஓய்வுக்காலம்:
வயது ஆகும் நிலையில், நிதி இலக்குகளை அடையத் துவங்குவதோடு, சேமிப்பும் முதலீடும் முதிர்வு அடையத் துவங்கும். ஓய்வுக்கால தேவைகளை மனதில் கொள்ள வேண்டும். கடன்சார் முதலீடுகள் வருமானம் பெற உதவும். எஞ்சிய தொகையை எதிர்கால தலைமுறைக்கு அளிக்கலாம்.