உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / சேமிப்பு கணக்கு பணத்தை சிறப்பாக நிர்வகிப்பது எப்படி?

சேமிப்பு கணக்கு பணத்தை சிறப்பாக நிர்வகிப்பது எப்படி?

வட்டி விகிதம் குறைய துவங்கியிருக்கும் சூழலில், வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள தொகையின் பலனை பாதுகாக்கும் வழிகள்.வைப்பு நிதி முதலீடு பாதுகாப்பானது என்றாலும் வட்டி விகித போக்கில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அதே போலவே வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் தொகை மீதான வட்டி விகிதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறி வரும் வட்டி விகித சூழலில், வங்கிகள் வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதங்களை குறைக்கத் துவங்கியுள்ளன. அண்மையில் முன்னணி தனியார் வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாகக் குறைத்துள்ளன. பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, 2.70 சதவீத வட்டி வழங்குகிறது. சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணம் பாதுகாப்பாக இருந்தாலும், அதனால் கிடைக்கும் பலனை கணக்கிட வேண்டும். எனவே, சேமிப்பு கணக்கு பணத்தை சரியாக நிர்வகிப்பது அவசியம்.

வைப்பு நிதி

சேமிப்பு கணக்கு பணத்தின் மூலம் அதிக பலன் தரக்கூடிய மாற்று முதலீடு வாய்ப்புகளை பரிசீலிக்கும் போது, பணமாக்கல் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சேமிப்பு கணக்கு பணத்தை பரிசீலிக்கும் போது, அதிக வட்டி தரக்கூடிய வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு சில தனியார் வங்கிகள் அதிக வட்டி விகிதம் அளித்தாலும், இதற்கான நிபந்தனைகளை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு தனியார் வங்கி, 7 சதவீதம் அளவில் வட்டி அளித்தாலும், இது பல்வேறு அளவுகளை கொண்டது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.அதோடு , கூடுதல் வட்டி விகிதத்திற்காக புதிய வங்கி கணக்கை துவக்கி பராமரிக்க வேண்டும். எனவே, வைப்பு நிதி வாய்ப்பை பரிசீலிக்கலாம். குறுகிய கால வைப்பு நிதியில் முதலீடு செய்தால், சேமிப்பு கணக்கை விட கூடுதல் வட்டி விகிதம் கிடைக்கும். ஆனால், பணம் குறிப்பிட்ட காலத்திற்கு வைப்பு நிதியில் முடங்கியிருக்கும். இடையே பணம் தேவை எனில், வைப்பு நிதியை உடைத்து எடுக்க வேண்டியிருக்கும். மேலும், வரும் மாதங்களில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மேலும் குறையலாம்.

லிக்விட் பண்ட்

சேமிப்பு கணக்கில் இருந்து வைப்பு நிதிக்கு மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். இதில், முன்கூட்டியே விலக்கிக் கொள்ளும் வசதி இருந்தாலும், வட்டி விகிதம் அதற்கேற்பவே அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சேமிப்பு கணக்கு தொகைக்கான மற்றொரு மாற்று வாய்ப்பாக 'லிக்விட் பண்ட்' முன்வைக்கப்படுகிறது. மியூச்சுவல் பண்ட் பிரிவின் கீழ் வரும் இந்த வகை நிதிகள், குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகின்றன. லிக்விட் பண்ட் முதலீடு பணமாக்கல் அம்சமும் கொண்டுள்ளது. விரும்பிய நேரத்தில் பணத்தை விலக்கிக் கொள்ளலாம். சராசரியாக 5 முதல் 6 சதவீத பலன் அளிக்கலாம். வரி நோக்கிலும் இந்த நிதிகள் சாதகமாக அமைவதாக கருதப்படுகிறது. இதே போல மிக குறுகிய கால நிதிகளும் இருக்கின்றன. ஹைப்ரிட் வகை நிதிகளும் இருக்கின்றன. இவற்றில் பலன் அதிகம் என்றாலும், தொடர்புடைய இடர் அம்சங்களை கவனிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ