உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / சரியான கணக்குக்கு தான் பணம் செல்கிறதா? அறிந்து கொள்ள செபியின் புதிய வசதி

சரியான கணக்குக்கு தான் பணம் செல்கிறதா? அறிந்து கொள்ள செபியின் புதிய வசதி

பங்கு தரகர்கள், முதலீட்டு ஆலோசகர்கள், ரிசர்ச் அனலிஸ்ட்கள் போன்ற பதிவு பெற்ற நிறுவனங்களுக்கென , தனிப்பட்ட 'யு.பி.ஐ., ஹேண்டில்' வசதியை, இம்மாதம் முதல் தேதியிலிருந்து, செபி அறிமுகம் செய்துள்ளது. நாம் சரியான நிறுவனத்துக்கு தான் பணத்தை அனுபுகிறோமா என சரிபார்த்துக் கொள்ளவும், மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல் இருக்கவும் இந்த வசதி பயன்படும். இந்த யு.பி.ஐ., ஹேண்டில்கள், '' என்ற தனித்துவமான வார்த்தையை கொண்டதாக இருக்கும். இந்த தனித்துவமான யு.பி.ஐ., ஹேண்டில்களை, என்.பி.சி.ஐ., ஒத்துழைப்புடன் பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு செபி வழங்கியுள்ளது. ஒவ்வொரு பதிவு பெற்ற சேவை வழங்கும் பிரிவினருக்கும், அவர்களுடைய பெயருக்குப் பின்னால் தனித்துவமான ஒரு பிற்சேர்க்கை குறியீடானது வழங்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, 'ஏபிசி' எனும் பெயர் கொண்ட ஷேர் ப்ரோக்கர் நிறுவனத்தின் 'வேலிட் யு.பி.ஐ., ஹேண்டில்' அவர்களுடைய வங்கிக் கணக்கு எச்.டி.எப்.சி., வங்கியில் இருந்தால் abc.validhdfc என்றும்; 'எக்ஸ்ஒய்இசட்' எனும் மியூச்சுவல் பண்டிற்கு, அவர்களுடைய வங்கிக் கணக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இருந்தால், யு.பி.ஐ., ஐடியானது xyz.validicici என்றும் இருக்கும். இப்படி நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் இருக்கும் அவர்கள் செயல்படும் பிரிவின் குறியீடும், என்ற வார்த்தையும், முதலீட்டாளர்கள் தாங்கள் சரியான கணக்கிற்குத் தான் பணத்தை அனுப்புகிறோம் என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள உதவியாக இருக்கும். பணத்தை பாதுகாக்கும் பச்சை நிற குறியீடுகள் முதலீட்டாளர்கள் பணம் செலுத்தும் போது, பச்சை நிற முக்கோணத்திற்குள் 'தம்ஸ் அப்' குறியீடையும் பார்க்க முடியும். அதேபோல் 'கியு.ஆர்., கோடு' நடுவேயும், பச்சை நிற முக்கோணத்துக்குள் 'தம்ஸ் அப்' குறியீடும் இருக்கும். இந்த கியு.ஆர்., கோடானது சாதரணமாக வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் கோடிலிருந்து மாறுபட்டதாகவும்; தனித்துவமான கோடாகவும் இருக்கும். மேலும் ஒரு பதிவு பெற்ற பங்குச்சந்தை நிறுவனத்தின் யு.பி.ஐ., ஐடி மற்றும் வங்கி விபரங்களை 'செபி செக் பிளாட்பார்ம்' (https://siportal.sebi.gov.in/intermediary/sebi-check) எனும் இணையதளத்தின் வாயிலாக முதலீட்டாளர்கள் சரி பார்த்துக்கொள்ள முடியும். இந்த இணையதளத்தில், யு.பி.ஐ., ஐடியின் போட்டோவை அப்லோட் செய்தோ, யு.பி.ஐ., ஹேண்டிலை டைப் செய்தோ, ஐ.எப்.எஸ்.சி., கோடு மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை கொடுத்தோ, அது செபி பதிவு பெற்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்குதானா என முதலீட்டாளர்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். இதனால் முதலீட்டாளர்களுக்கு பின்வரும் பயன்கள் கிடைக்கும்:  செபி பதிவு பெற்ற சரியான நிறுவனத்திற்கு தான் பணத்தை செலுத்துகிறோமா என ஊர்ஜிதம் செய்துகொள்ள முடியும்  தம்ஸ்-அப் குறியீடு இல்லாத பட்சத்தில், அது மோசடியான குறியீடு என அவர்கள் கண்டறிந்துகொள்ளலாம்  எளிதான, நம்பகமான மற்றும் வெளிப்படையான ஒரு கட்டமைப்பின் வாயிலாக நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் பரிவர்த்தனை செய்யலாம் மொத்தத்தில் செபியின் இந்த முயற்சியானது, பதிவு பெறாத மோசடி நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்யாமல் தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை