உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் தொழில்முனைவோர் மாநாடு

மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் தொழில்முனைவோர் மாநாடு

சென்னை:''நாட்டில் நிறைய 'ஸ்டார்ட் அப்'கள் உருவாக வேண்டும்; புதிய தயாரிப்புகள் வர வேண்டும். இவைதான், உன்னத பாரதத்தை உருவாக்கும்,'' என, மெட்ராஸ் ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.ஐ.ஐ.டி., மெட்ராஸ், தொழில்முனைவோர் பிரிவின், 10வது ஆண்டையொட்டி, பிப்., 28 முதல் மார்ச் 2ம் தேதி வரை, மூன்று நாள் 'இ - உச்சி மாநாடு 2025' மெட்ராஸ் ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெற உள்ளது.இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில், ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:நாட்டில், நிறைய 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் மற்றும் புதிய தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும். இவைதான், உன்னத பாரதத்தை உருவாக்கும். இம்மாநாட்டில், முதன் முறையாக, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 'பிட்ச்பெஸ்ட்' எனும் பிரிவில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்காக, நாட்டின் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மாநாட்டில், நாடு முழுதும் இருந்து, 1,000 நிறுவனர்கள், 50 முதலீட்டாளர்கள், 400க்கும் மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். 100 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் இந்நிகழ்ச்சி ஒன்றிணைக்கிறது. நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, வணிகம் சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்குவதற்காக, 'பூட்கேம்ப்' எனும் பயிற்சிப் பட்டறை நடக்கிறது. சிறந்த 'இன்குபேட்டர்' வாயிலாக நேரடி பயிற்சி வழங்கப்படுகிறது. 'எலிவேட்' எனும் பிரிவில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை, வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கிறது. நிதி திரட்டல், திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தும் திட்டங்கள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.செய்தியாளர் சந்திப்பில், மெட்ராஸ் ஐ.ஐ.டி., மாணவர் தலைவர் சத்யநாராயணன் கும்மாடி, இ - செல் ஆலோசகர் ரிசா அகர்வால், மாணவ இணை பாடத்திட்ட செயலர் சுகேத் கல்லுபள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை