உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ராக்கெட் வேகத்தில் பாயும் தங்கம் விலை தேவை குறைந்ததால் தள்ளுபடி தாராளம்

ராக்கெட் வேகத்தில் பாயும் தங்கம் விலை தேவை குறைந்ததால் தள்ளுபடி தாராளம்

புதுடில்லி:இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டுவதால், அதன் தேவை குறைந்து வருகிறது. இதை ஈடு செய்வதற்காக தங்கம் இறக்குமதியாளர்கள், கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு, வணிகர்களுக்கு அதிகபட்சமாக 1 அவுன்ஸ் தங்கத்திற்கு 39 டாலர், அதாவது 3,400 ரூபாய் வரை தள்ளுபடி அளித்து வருகின்றனர்.அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கை காரணமாக, உலகளவில் வர்த்தக போர் அபாயம் அதிகரித்து உள்ளது. இதனால், சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டை அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. விலை உயர்வு காரணமாக, தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டி, விலை குறையட்டும் என வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். இதனால், தங்க வர்த்தகம் தேக்கமடைந்து, நகைகளின் தேவை கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல, நகை வணிகர்களும் தங்கத்தை கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.இந்தியாவின் தங்கக்கட்டிகள் இறக்குமதி, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரியில் 85 சதவீதம் அளவுக்கு சரிந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து, 66,000 ரூபாயை தாண்டி உள்ளது. இதனால், விற்பனையை அதிகரிக்க தங்கம் வணிகர்கள் அதிக தள்ளுபடி வழங்க முன்வருகின்றனர்.இது குறித்து, தங்க நகை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாவது:நகைக்கடைகளில் தங்கம் வாங்குவற்கு, சில வாடிக்கையாளர்கள் மட்டுமே வருகின்றனர். கிடுகிடுவென தங்கம் விலை உயர்வதால், தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த வாரம் 1 அவுன்ஸ் தங்கத்திற்கு 870 - 1,827 ரூபாய் வரை தள்ளுபடி அளித்த நிலையில், இந்த வாரம் 3,400 ரூபாய் வரை தள்ளுபடி அளித்து வருகிறோம். ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28 கிராமுக்கு சமமானது. இதில், 6 சதவீத இறக்குமதி வரி, 3 சதவீத விற்பனை வரி ஆகியவை அடங்கும். நடப்பு நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால், கணக்குகளை முடிப்பதில் கவனம் செலுத்துவதால், தங்க நகை வியாபாரிகள் அதிக விலைக்கு தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை