ஸ்டீல் இறக்குமதி வரியை உயர்த்த குமாரசாமி வலியுறுத்தல்
புதுடில்லி:ஸ்டீல் மீதான இறக்குமதி வரியை 12 சதவீதமாக உயர்த்த, மத்திய நிதியமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக, மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்து உள்ளார். 'இந்திய ஸ்டீல் அசோசியேஷன்' சார்பில் நடைபெற்ற 5வது மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:சீனாவில் இருந்து அதிகளவில் ஸ்டீல் இறக்குமதியாவதால், இத்துறையினர் எதிர்கொண்டு வரும் பிரச்னையை, மத்திய நிதியமைச்சகத்திடம் எடுத்துக் கூறி உள்ளேன். ஸ்டீல் மீதான இறக்குமதி வரியை 7.50 சதவீதத்தில் இருந்து, 10 - 12 சதவீதம் ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஸ்டீல் தேவை, இரட்டை இலக்கத்தில் அதிகரித்து உள்ளது. இந்திய ஸ்டீல் துறை மேலும் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை உள்ளது.