உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆகஸ்டில் வளர்ச்சி சரிவடைந்த தயாரிப்பு துறை நிறுவனங்கள்

ஆகஸ்டில் வளர்ச்சி சரிவடைந்த தயாரிப்பு துறை நிறுவனங்கள்

புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியும்; அவற்றின் விற்பனையும் சிறிதளவு வளர்ச்சியையே கண்டதாக எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது. மேலும், பணவீக்கம் தொடர்பான கவலைகள், எதிர்கால வணிகம் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கையை சற்றே குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.ஆகஸ்ட் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜூலையில் 58.10 புள்ளிகளாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 57.50 புள்ளிகளாக குறைந்துள்ளது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; குறைவாக இருந்தால், சரிவை குறிக்கும்.இந்த வகையில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், சற்று குறைந்திருந்தாலும், இதுவும் வளர்ச்சியையே குறிக்கும்.வலுவான போட்டி காரணமாக, புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி வளர்ச்சியின் வேகம் சற்றே குறைந்தது. நடப்பாண்டில் முதல் முறையாக ஏற்றுமதி ஆர்டர்களும் குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மூலப் பொருட்களின் விலை கடந்த மாதம் குறைந்தது, நிறுவனங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்தது. இதன் காரணமாக நிறுவனங்களின் லாபம் அதிகரித்தது. மேலும், மூலப் பொருட்களின் கொள்முதலை அதிகரித்து தங்களது இருப்பையும் உயர்த்தின. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு கடந்த ஆகஸ்டில் தான், எதிர்கால வணிகம் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை சற்றே குறைந்து காணப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை