ஜப்பானின் 2வது பெரிய நிறுவனமானது சோனி
புதுடில்லி:சந்தை மதிப்பின் அடிப்படையில், ஜப்பானின் இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது சோனி கார்ப்பரேசன் குழுமம். இதுவரை இரண்டாவது பெரிய நிறுவனமாக இருந்து வந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12.74 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், சோனி நிறுவனத்தின் மதிப்பு 12.99 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் 20.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 1946ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்ப காலத்தில், டோக்கியோ சுஷின் கோக்யோ என அறியப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின், நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பொருளாதார மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, எட்டு பணியாளர்களுடன் சிறிய மின்ன ணுவியல் கடையாக துவங்கப்பட்டது தான் சோனி நிறுவனம். நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு அதன் பிளே ஸ்டேஷன் வணிகமே முக்கியப் பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது.