நடப்பாண்டின் முதல் அரையாண்டில் அதிகரித்தது வர்த்தக பற்றாக்குறை
புதுடில்லி:இந்தியா, நடப்பாண்டின் முதல் பாதியில், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 151 நாடுகளுடன் வர்த்தக உபரியையும், அதேநேரத்தில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளுடன் வர்த்தக பற்றாக்குறையையும் பதிவு செய்துள்ளதாக ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஜி.டி.ஆர்.ஐ., எனப்படும் உலக வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது: நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 151 நாடுகளுடன் வர்த்தக உபரியை இந்தியா பதிவு செய்துள்ளது. இதன்படி, நாட்டின் ஏற்றுமதி 55.80 சதவீதமும், இறக்குமதி 16.50 சதவீதமுமாக இருந்தது. இதன் மொத்த மதிப்பு 5.98 லட்சம் கோடி ரூபாயாகும். வர்த்தக உபரியானது அமெரிக்காவுடன் 1.74 லட்சம் கோடி ரூபாயாகவும், நெதர்லாந்துடன் 96,280 கோடி ரூபாயாகவும் அதிக அளவில் இருந்தது. இதே காலகட்டத்தில், இந்தியா 75 நாடுகளுடன் வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டிருந்தது. இது அதன் ஏற்றுமதியில் 44.20 சதவீதமாகவும், இறக்குமதியில் 44.20 சதவீதமாகவும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு 15.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறையைக் காட்டிலும் இது மிகப் பெரியதாகும். குறிப்பிட்ட இறக்குமதி மீதான நம்பிக்கையைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடிய, சீனா போன்ற நாடுகளில் இருந்து தொழில்துறை பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.