விஸ்வகர்மா திட்டத்துக்கு 2.58 கோடி விண்ணப்பங்கள்
புதுடில்லி; 'பிரதம மந்திரி விஸ்வகர்மா' திட்டத்தின் கீழ், இதுவரை 2.58 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 23.70 லட்சம் விண்ணப்பதாரர்கள் மூன்று அடுக்கு சோதனைக்கு பின், வெற்றிகரமாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துள்ளதில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர், அவரவர் தொழிலுக்கு ஏற்ப நவீன கருவிகளை வாங்குவதற்கு 75,000 ரூபாய் மதிப்பிலான மின்னணு வவுச்சரை பெற்றுள்ளனர் என்றும் அரசு தெரிவித்துஉள்ளது. நாட்டில் உள்ள கைவினை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, நிதி உதவி, கருவிகள் மற்றும் சந்தைபடுத்துதலில் உதவி உள்ளிட்டவை வழங்கப்படும்.