உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பொரி விற்பனை 30% சரிவு: அரசு ஆய்வு செய்ய கோரிக்கை

பொரி விற்பனை 30% சரிவு: அரசு ஆய்வு செய்ய கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பொரி விற்பனை ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் மூட்டைகள் வரை விற்பனையாகும். ஆனால், இந்த முறை 2.10 லட்சம் மூட்டைகள் எனும் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இது 30 சதவீத சரிவாகும். இது குறித்து அரிசி ஆலை ஆலோசகர் முனுசாமி கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாகவே பொரியின் நுகர்வு குறைந்து வருகிறது. தற்போது வட மாநிலத்திலிருந்து ‘லாலத்’ என்ற நெல் ரகத்திலிருந்து உருவாக்கப்படும் ‘மூரி’ என்ற அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை 33 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. இதனால், ஒரு மூட்டை பொரி (6 கி லோ) 350 முதல் 380 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. நிறுவனங்கள் இந்த ஆயுத பூஜைக்கு பொரி வாங்குவதற்கான ஆர்டர்களை குறைத்துள்ளன. குறைந்து வரும் நுகர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இந்த ஆயுத பூஜை பொரி விற்பனை 30 சதவீதம் சரிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு செய்ய வேண்டும்

“தமிழகத்தில் பொரி விற்பனையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். உற்பத்தி செலவை குறைக்க, பொரி உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்களை வாங்குவதற்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். பொரி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய பொருட்களில் ஒன்றான பொரியை மக்கள் வாங்குவதற்கான பிரசாரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்,” என கிருஷ்ணகிரி மாவட்ட பொரி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

விற்பனை சரிவுக்கான காரணங்கள்

• குறைந்து வரும் பொரியின் நுகர்வு• விலை உயர்வால் வாங்குவது குறைவு• பெரிய நிறுவனங்களின் ஆர்டர் குறைந்தது.

பொரி உற்பத்தி செய்யப்படும் முக்கிய இடங்கள்

காவேரிப்பட்டணம் (கிருஷ்ணகிரி), கே.வி.குப்பம் (வேலுார்), கொல்லப்பட்டி (தர்மபுரி), பழனி (திண்டுக்கல்), செங்கப்பள்ளி, உடுமலை (திருப்பூர்), மணப்பாறை (திருச்சி), சிங்கம்புணரி (சிவகங்கை), போளூர் (திருவண்ணாமலை), காரமடை (கோவை), ப.வேலுார் (நாமக்கல்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !