கோவை உலக ஸ்டார்ட் அப் மாநாட்டால் ரூ.130 கோடி திரட்டிய 34 நிறுவனங்கள்
சென்னை, கோவையில் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக, 34 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து, 129.94 கோடி ரூபாயை திரட்டிஉள்ளன. தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உலகளாவிய தொடர்பு, சந்தை வாய்ப்பு, முதலீடு கிடைக்க, கோவையில் இம்மாதம், 9, 10ல் உலக ஸ்டார்ட்அப் மாநாட்டை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் நடத்தியது. இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்ற, 1,012 அரங்குகள் இடம்பெற்றிருந்தன. இதில், தமிழக நிறுவனங்களின் எண்ணிக்கை 750. மாநாட்டிற்கு, 72,278 பார்வையாளர்கள் வந்த நிலையில், 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு சந்தைகள், காப்பீடு ஆதரவு, உலகளாவிய வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக, பிரான்ஸ் நாட்டின் லிங்க் இன்னோவேஷன்ஸ், ஜெர்மனியின் ஆசியாபெர்லின் போரம், கனடாவின் ஆர்.எக்ஸ்.என்., ஹப், சிங்கப்பூரின் ரிவர் வென்ச்சர் ஸ்டூடியோ, 'லோவ்ஸ் இந்தியா' உட்பட, 23 உலகளாவிய மற்றும் பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக ஸ்டார்ட்அப் மாநாட்டில், 45 நாடுகளில் இருந்து, 115 முதலீட்டாளர்கள் பங்கேற்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக 453 சந்திப்புகள் நடத்தப்பட்டன ஆலோசனைகளுக்கு பிறகு, 34 நிறுவனங்களுக்கு, ரூ.130 கோடி முதலீடு கிடைத்துள்ளது