சென்னை, தேனி, ராமநாதபுரம், தஞ்சையில் ரூ.50 கோடியில் 5 பொது வசதி மையங்கள்
சென்னை:சென்னை அம்பத்துாரில் இன்ஜினியரிங் சாதனங்கள், தேனியில் நறுமணப் பொருட்கள் உட்பட ஐந்து வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பயன்பெற, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை, 50 கோடி ரூபாய் செலவில் ஐந்து பொது வசதி மையங்களை அமைக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பொது வசதி மையங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது, சென்னை அம்பத்துாரில் இன்ஜினியரிங் பொருட்கள், தேனி மாவட்டம் போடிநாயக்கனுாரில் நறுமணப்பொருட்கள், நாமக்கல்லில் முட்டை உணவுசார்ந்த பொருட்கள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மின் சாதனங்கள், தஞ்சையில் கைவினை பொருட்கள் இவற்றுக்கான பொது வசதி மையங்களை அமைக்க சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிக ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஐந்து பொது வசதி மையங்களும், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். அவற்றை அமைக்கும் பணியை தொழில் வணிக ஆணையரகத்துடன், தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும். இந்த பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன'' என்றார். பொது வசதி மையம் சிறு, குறு தொழில்கள் குறைந்த முதலீட்டில் செயல்படுகின்றன. இதனால், புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்வதற்கான, நவீன இயந்திரங்களை வாங்க நிதியில்லாமல் சிரமப்படுகின்றன. அவற்றுக்கு உதவ, ஒரு இடத்தில் ஒரே தொழிலில் ஈடுபட்டு உள்ள பல நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், நவீன இயந்திரங்களை உள்ளடக்கிய பொது சேவை மையத்தை அரசு அமைக்கிறது. இந்த இயந்திரங்களை, அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.