உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஒரே நாளில் 70 லட்சம் சதவீதம்! ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்கு

ஒரே நாளில் 70 லட்சம் சதவீதம்! ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்கு

மும்பை : மும்பை பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக, ஒரே நாளில் 'எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' நிறுவனத்தின் பங்கு விலை, 70.30 லட்சம் சதவீதம் அளவுக்கு உயர்ந்து, புதிய சாதனை படைத்து உள்ளது. மும்பையைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பங்கு, கடந்த ஜூனில் வெறும் 3.53 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதுவும் 500 பங்குகள் ஒரு முறை மட்டுமே வர்த்தமாகி இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம், 241 பங்குகள் வர்த்தகமான நிலையில், ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை, 2.36 லட்சம் ரூபாயாக அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட 70.30 லட்சம் சதவீதம் உயர்வு கண்டுள்ளது. இதன் வாயிலாக, இந்திய பங்குச் சந்தையில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்புடைய பங்கு கொண்ட எம்.ஆர்.எப்., நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, 2.36 லட்சம் ரூபாய் விலையுடன் அதிக விலை மதிப்பு கொண்ட பங்கு என்ற பெருமையை பெற்று உள்ளது. எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4,725 கோடி ரூபாய். கடந்த 2023--24ம் நிதியாண்டில், இந்நிறுவனம் 235 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தது. இதில், 176 கோடி ரூபாய் டிவிடெண்டு மற்றும் லாபத்தொகை ஆகும். ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் 1.28 சதவீத பங்குகள் இந்நிறுவனத்தின் வசமுள்ளது.

திடீர் உயர்வு ஏன்?

கடந்த 2011 முதல் சந்தையில் எல்சிட் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை மூன்று ரூபாயாக இருந்தாலும், அதன் புத்தக மதிப்பில், ஒரு பங்கின் மதிப்பு 5,85,225 ரூபாயாக இருந்தது. சந்தையில் பங்கு விலை குறைந்த விலையில் இருப்பதால், அதன் பங்குதாரர்கள் பங்குகளை விற்க விரும்பவில்லை. இதனால் எவ்வித வர்த்தகமும் நடைபெறவில்லை.இந்நிலையில், சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி', எல்சிட் போன்ற பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் நியாயமான விலையை கண்டறிய, சிறப்பு அமர்வை நடத்துமாறு, பங்குச் சந்தைகளை கேட்டுக்கொண்டது. புதிய கணக்கீட்டு முறையில், சிறப்பு அமர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, புத்தக மதிப்பை விட, குறைந்த விலையில் வர்த்தகமான பங்கு திடீரென விலை உயர்ந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை