| ADDED : ஜன 28, 2024 04:26 AM
புதுடில்லி: கடந்த 10 மாதங்களில் 75,000 காப்புரிமைகள் வழங்கி, இந்திய காப்புரிமை அலுவலகம் சாதனை படைத்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: இந்திய காப்புரிமை அலுவலகம், கடந்த 10 மாதங்களில் 75,000 காப்புரிமைகளை வழங்கி சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவின் புதுமைகள் படைக்கும் திறனை பிரதிபலிப்பதாக உள்ளது. தொழில்முனைவோரின் சுமையை குறைக்கும் வகையில் 40,000 விதிமுறைகளுக்கான இணக்கங்களில் பல நீக்கப்பட்டுள்ளன மற்றும் பல எளிமைப்படுத்தப்பட்டுஉள்ளன. வணிகம் செய்வதை அரசு எளிதாக்குகிறது. வணிகம் தொடர்பான பல சட்டங்களில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்வதை குறைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை நவீனப்படுத்தவும், காப்புரிமைகள், வர்த்தக குறியீடுகள் மற்றும் காப்புரிமைகள் தொடர்பான சிக்கலான நிர்வாக நடைமுறைகளை முறைப்படுத்தவும், அமைச்சகம் ஏராளமான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.