உணவக தொழிலை ஊக்குவிக்க தனிக்கொள்கை வெளியிட வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்
சென்னை:'உணவக தொழிலை ஊக்குவிக்க சலுகைகள் அடங்கிய தனி கொள்கையை மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என, இந்திய தேசிய உணவக சங்கம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, ஹோட்டல்களில் உணவு வகைகள் விலை, 15 சதவீதம் வரை குறையும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் சென்னை பிரிவு இணை தலைவர் பாலச்சந்தர் கூறியதாவது:இந்திய உணவக சங்கத்தில், நாடு முழுதும் ஐந்து லட்சம் உணவகங்கள் இடம்பெற்றுள்ளன. சங்கத்தின் மாநாடு சென்னையில் நாளை நடக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து, 1,200 உணவகங்களின் பிரதிநிகள் பங்கேற்கின்றனர். அதில், உணவகத் தொழிலின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்படும்.உணவகத் தொழில் வாயிலாக, அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த தொழிலை, தொழில் துறையாகக் கருதி ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய தனிக்கொள்கையை, மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும். உணவகங்கள் ஜி.எஸ்.டி., செலுத்தும்போது, மூலப்பொருட்கள் போன்றவற்றுக்காக ஏற்கனவே தாங்கள் செலுத்திய வரி போக, மீதி வரியை செலுத்தக்கூடிய, 'இன்புட் டேக்ஸ் கிரெடிட்' எனப்படும் உள்ளீட்டு வரி முறையை அமல்படுத்த வேண்டும். உணவகத் தொழிலுக்கு ஊதிய மானியம், திறன் மேம்பாட்டு பயிற்சி மானியம் வழங்க வேண்டும். வாடகைக்கு அதிகம் செலவாகிறது. குறிப்பாக, சென்னை யில் ஒரு சதுர அடி வாடகை, கிட்டத்தட்ட 200 ரூபாயாக உள்ளது. எனவே, பொது - தனியார் கூட்டு முறையில் உணவகம் அமைக்க, அரசு காலியிடங்களை வழங்க வேண்டும். இதனால், உணவகங்களின் செலவு குறையும்; உணவு வகைகள் விலை, 15 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.