உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 100 பொருட்களின் வரியை குறைக்க ஆலோசனை: மருந்து, சைக்கிள் வரி குறையவும், குளிர்பான வரி உயரவும் வாய்ப்பு

100 பொருட்களின் வரியை குறைக்க ஆலோசனை: மருந்து, சைக்கிள் வரி குறையவும், குளிர்பான வரி உயரவும் வாய்ப்பு

புதுடில்லி:ஜி.எஸ்.டி.,யில், 12 சதவீத வரி விதிப்பில் உள்ள 100 பொருட்களின் வரியை, 5 சதவீதமாகக் குறைப்பது குறித்து, அக்டோபர் 20ல், ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கான அமைச்சர்கள் குழு பரிசீலிக்க உள்ளது.இது குறித்து, குழுவின் உறுப்பினரான, மேற்கு வங்க நிதி அமைச்சர் சந்திரமா பட்டாச்சாரியா கூறியதாவது:ஜி.எஸ்.டி., சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழு, டில்லியில் புதன்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது. மருந்து மற்றும் மருத்துவத் துறை சார்ந்த பொருட்கள் மீதான 12 சதவீத வரியை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், 12 சதவீத பிரிவில் உள்ள, 100 பொருட்களின் வரியை 5 சதவீதமாகக் குறைப்பது பற்றி அக்டோபர் 20ல் நடைபெறவுள்ள கூட்டத்தில் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது.சைக்கிள், பாட்டில் குடிநீர் ஆகியவற்றின் மீதான வரியை குறைப்பது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. 12 சதவீத வரி பிரிவில் உள்ள பொருட்களில், சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் வரி குறைப்பு செய்வது குறித்தும் பேசினோம். மேலும், குளிர்பானங்கள் உட்பட சில பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. பலமுறை நடைபெற்ற வரி சீரமைப்புகளால், இந்த ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜி.எஸ்.டி.,யின் சராசரி விகிதம், 11.56 சதவீதமாகக் குறைந்துள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

காப்பீடுக்கு தனி கூட்டம்

மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை நீக்குவது தொடர்பான அமைச்சர்கள் குழு, அக்டோபர் 19ல் கூடவுள்ளது. பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடைபெறவுள்ள முதலாவது கூட்டத்தில், காப்பீடு மீதான 18 சதவீத வரியை முற்றிலும் நீக்குவதா அல்லது குறைப்பதா என்பது குறித்து ஆலோசித்து பரிந்துரைக்கப்பட இருக்கிறது. இந்த குழுவில், தமிழகம் உட்பட 13 மாநிலங்களின் அமைச்சர்கள் உறுப்பினராக உள்ளனர். காப்பீடு பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி., விலக்கு தேவை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !