உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புக்கு ஆந்திரா ரூ.5,000 கோடி ஊக்கத்தொகை

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புக்கு ஆந்திரா ரூ.5,000 கோடி ஊக்கத்தொகை

விஜயவாடா:ஆந்திராவில் மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, 5,000 கோடி ரூபாய் ஊக்கத்தொகை திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பை அதிகரிக்க, கடந்த மார்ச் மாதத்தில், 2.29 லட்சம் கோடி ரூபாயில் மத்திய அரசு ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்திருந்தது. மின்னணு உதிரிபாகங்களுக்கு சீனாவில் இருந்து இறக்குமதியை சார்ந்திராமல், சுயசார்பை எட்டும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆந்திரா உட்பட சில மாநிலங்களில் முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் மின்னணு உதிரிபாக தொழிற்சாலை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு 75 சதவீதம் வரை நிலத்தின் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. முதல் ஆறு ஆண்டுகளுக்கு மின் கட்டணமும் செலுத்த தேவையில்லை என கூறப்பட்டு உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 250 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முன்வரும் முதல் 10 நிறுவனங்களுக்கு 50 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான, வரைவறிக்கையை வெளியிட்டுள்ள ஆந்திர அரசு, மொத்தம் 5,000 கோடி ரூபாய்க்கு ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக அதில் தெரிவித்துள்ளது. முன்னணி மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான சைர்மா எஸ்.ஜி.எஸ்., இந்த ஊக்கத் தொகையைப் பெற விண்ணப்பித்துள்ளதாக ஆந்திர அரசு கூறியுள்ளது.  ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு, 75 சதவீதம் வரை நிலத்தின் விலையில் தள்ளுபடி  முதல் ஆறு ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த தேவையில்லை  ரூ.250 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 50 சதவீத முதலீட்டு மானியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை