புத்தாண்டில் நல்ல துவக்கம் வாகன விற்பனையாளர் மகிழ்ச்சி
புதுடில்லி:ஜனவரி மாதத்துக்கான வாகன விற்பனை அறிக்கையை வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுதும் விற்பனை ஆன வாகனங்கள், கடந்த மாதம் 6.63 சதவீதம் உயர்ந்து, புத்தாண்டில் நல்ல ஆரம்பத்தை தந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், 21.49 வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், இந்த ஜனவரியில், 22.91 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.இதுகுறித்து வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறியதாவது:இருசக்கர வாகன விற்பனை, ஆண்டு அடிப்படையில் 4.15 சதவீதமும்; மாத அடிப்படையில் 27.39 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. புதிய அறிமுகங்கள், திருமண கால தேவை மற்றும் அதிகரித்துள்ள நிதி வசதி ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக முகவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், உயரும் வட்டி விகிதங்கள், குறையும் கிராமப்புற பணப்புழக்கம் மற்றும் நிச்சயம் இல்லாத சந்தை உணர்வு ஆகியவை சவாலாக உள்ளன. பயணியர் கார் விற்பனை, ஆண்டு அடிப்படையில் 15.53 சதவீதமும், மாத அடிப்படையில் 58.77 சதவீதமும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனை ஆன கார்கள், 2025 மாடல் கார் என்ற அடிப்படையில், ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்டதே விகிதம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் ஆகும். நகர்ப்புறத்தில் 13.72 சதவீத வளர்ச்சியும், கிராமப்புறத்தில் அதைவிட அதிகமாக 18.57 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. வர்த்தக வாகன விற்பனை, ஆண்டு அடிப்படையில் 8.22 சதவீதமும், மாத அடிப்படையில் 38.04 சதவீதமும் அதிகரித்துள்ளது. உயர்ந்த சரக்கு போக்கு வரத்து கட்டணங்கள் மற்றும் பயணியர் போக்கு வரத்து வாகன தேவை, முகவர்களிடம் குறைந்த பணப்புழக்கம், கடுமையான நிதி கொள்கைகள் மற்றும் மந்தமான சிமென்ட் மற்றும் நிலக்கரி துறைகள் ஆகியவை வர்த்தக வாகன விற்பனைக்கு சவாலாக அமைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
ஜனவரி மாத விற்பனைகள்
வாகன வகை ஜனவரி 2024 ஜனவரி 2025 வளர்ச்சி (%)இருசக்கர வாகனம் 14,65,039 15,25,862 4.15மூன்று சக்கர வாகனம் 1,00,160 1,07,033 6.86பயணியர் கார் 4,03,300 4,65,920 15.53டிராக்டர் 88,741 93,381 5.23வர்த்தக வாகனம் 91,877 99,425 8.22மொத்தம் 21,49,117 22,91,621 6.63