உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மரபணு மாற்றப்படாத உணவு பொருள் இறக்குமதியை உறுதி செய்ய வேண்டும் பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல்

மரபணு மாற்றப்படாத உணவு பொருள் இறக்குமதியை உறுதி செய்ய வேண்டும் பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல்

புதுடில்லி :மரபணு மாற்றப்படாத உணவுப் பொருட்கள் மட் டுமே நம் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு, மத்திய அரசை பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்திஉள்ளது. பாரதிய கிசான் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் விவசாய பிரிவு ஆகும். கடந்த வார இறுதியில் இந்த அமைப்பின் செயற்குழு கூட்டம் நாக்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்தும், இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதுகுறித்து சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களும் மரபணு மாற்றப்படாதவையாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான அதிகாரம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பு தன் பணியில் தவறியுள்ளது. அனைத்து விவசாயப் பயிர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களிலும் ரசாயன எச்சங்களுக்கான தரநிலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். நாட்டின் பல்வேறு பொது சுகாதார அமைப்புகளும், உணவு மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களும், அல்சைமர், புற்றுநோய், தோல் மற்றும் சுவாச நோய்களுக்கு முக்கிய காரணம் ரசாயன விவசாய பொருட்களே என்பதை உறுதிப்படுத்தி உள்ளன. பூச்சிக்கொல்லி எச்சங்களால், லிம்போமா மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் விவசாயிகள் மத்தியில் மட்டுமல்லாமல், இந்த உணவை உட்கொள்ளும் மக்களிடையேயும் வேகமாக அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க நாடாக இந்தியா உருவாக, பசு அடிப்படையிலான இயற்கை பொருட்கள் சார்ந்த வேளாண் வர்த்தகத்திற்கான உத்தி பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக பேச்சில், மரபணு மாற்றப்பட்ட சோயாபீன் மற்றும் சோளத்தை அனுமதிக்க அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இந்த தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை