உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / செங்கல்பட்டில் பயோடெக் தொழில் பூங்கா மருந்து தொழில் முதலீட்டை ஈர்க்க இலக்கு

செங்கல்பட்டில் பயோடெக் தொழில் பூங்கா மருந்து தொழில் முதலீட்டை ஈர்க்க இலக்கு

சென்னை:மருந்து, வேளாண் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, செங்கல்பட்டு மாவட்டம், ஆலப்பாக்கத்தில், 55 ஏக்கரில், 'பயோடெக்' தொழில் பூங்காவை, தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் அமைக்க உள்ளது. உலகம் முழுதும், 'பயோ டெக்னாலஜி' எனப்படும் உயிரி தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இது, மருத்துவம், வேளாண், சுற்றுச்சூழல், தொழில் உட்பட பல்வேறு துறைகளில் பயனுள்ள பொருட்களை உருவாக்குவதற்காக, நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுக்களை பயன்படுத்தி, உயிரினங்களை பரிசோதித்து மாற்றம் செய்யும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையாகும். தமிழகத்தில் பயோ டெக்னாலஜி துறையில், பல முன்னணி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த துறையின் சூழலமைப்பை ஊக்குவிக்கவும், உயிரியல் மருந்து, நோய் தீர்வியல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தவும், பயோடெக்னாலஜி தொழில் பூங்காவை, செங்கல்பட்டு தாலுகா, ஆலப்பாக்கத்தில், 55 ஏக்கரில், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது. இந்த பூங்கா, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி, மருந்துகள், தடுப்பூசிகள், தொழில், விவசாயம், கடல்வளத்துக்கான பயோடெக் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உயிர் அறிவியல் துறை போன்றவற்றுக்கான ஒருங்கிணைந்த மையமாக திகழும். பயோடெக் பூங்காவில் உள்ள மனைகள், உற்பத்தி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், புத்தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட உள்ளன. இந்நிறுவனங்கள், குறைந்த செலவில் பயன்பெறும் வகையில், அதிநவீன சாதனங்களுடன் பொது வசதி மையத்தையும் அமைக்க, டிட்கோ திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை