கடன் பெறுவதை குறைத்து நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும் தமிழக அரசுக்கு சி.ஏ.ஜி., அறிவுறுத்தல்
சென்னை: தமிழகம் பெறும் கடனில் பெரும்பகுதி அன்றாட செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கட்டமைப்பு வசதிகளுக்கு அதை குறைவாகவே பயன்படுத்துவதாகவும் சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனை சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு, மாநில நிதி ஆதாரங்களை திரட்ட முயற்சிக்கவும் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை கடந்த 2023-24ம் நிதியாண்டுக்கான சி.ஏ.ஜி., அறிக்கை சட்டசபையில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்ப தாவது: தமிழக அரசு வாங்கும் கடனில் 31 சதவீதம் வரை மட்டுமே கட்டமைப்பு திட்டங்களுக்கு முதலீட்டு செலவினமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மை கடன் தொகை, தினசரி நுகர்வாக ஊதியம் மற்றும் கடனுக்கான வட்டி செலுத்தலுக்கு செலவிடப்படுகிறது. கடன் தொகையில் சொத்து உருவாக்கம், வளர்ச்சி நடவடிக்கைகளை விட அன்றாட செயல்பாட்டுக்கே அதிகம் செலவாகிறது. கடன் பெறுவதை மட்டுமே சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு, தமிழகத்தின் நிதி ஆதாரங்களை திரட்ட அரசு முயற்சிக்க வேண்டும். தமிழகத்தின் வருவாய் மற்றும் செலவழிப்பில் தொடர்ந்து வேறுபாடு காணப்படுவது, நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பதை காட்டுகிறது. கடந்த, 2022 - 23ம் ஆண்டை விட 2023 - 24ல் வருவாய் பற்றாக்குறை 36,215 கோடி ரூபாயில் இருந்து 45,121 கோடி ரூபாயாக 24.59 சதவீதம் உயர்ந்துள்ளது. கடைப்பிடிக்கவில்லை நிதிப் பற்றாக்குறை 81,886 கோடி ரூபாயில் இருந்து 90,430 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு இடையிலும் 2019-20ல் 20,144 கோடி ரூபாயாக இருந்த மானிய செலவு, 2023-24ல் 37,749 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறையை 2025 - 26ம் நிதி ஆண்டுக்குள் முழுதும் நீக்கும் இலக்கு உள்ள நிலையில், இது 24.59 சதவீதமாக அதிகரித்திருப்பது, இலக்கை எட்டும் வழிகளை அரசு கடைப்பிடிக்கவில்லை என்பதை காட்டுகிறது. நிதிப் பற்றாக்குறை இலக்கு 3 சதவீதம் என்ற நிலையில், அதைவிட அதிகமாக 3.32 சதவீதமாக உள்ளது.